முகப்பு
வேலூர்

கிராமங்களில் விளையாட்டுத் திடல் அமைத்ததில் ஊழல்!

 வேலூர், ஜூன் 24: வேலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் விளையாட்டுத் திடல் அமைத்ததில் ஊழல் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.  வேலூர் மாவட்டத்தில

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:30 PM
பகிர்:
Updated On : 26 டிசம்பர், 2023 at 11:56 AM

 வேலூர், ஜூன் 24: வேலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் விளையாட்டுத் திடல் அமைத்ததில் ஊழல் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

 வேலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தலா 150 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, 2006-2007, 2007-2008, 2008-2009 ஆகிய 3 ஆண்டுகளில் 450 ஊராட்சிகளில் விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்பட்டன.

 விளையாட்டுத் திடலுடன் இருக்கும் பள்ளிக்கு ரூ.1.50 லட்சத்தில் உபகரணங்கள், பள்ளித் திடல் இல்லாத ஊராட்சியில் சமுதாயத் திடல் அமைத்து ரூ.1 லட்சத்தில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Advertisement

 விளையாட்டுத் திடல் ஆய்வு மற்றும் இவற்றை ஆய்வு செய்வது உள்பட அனைத்துப் பொறுப்புகளும் மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் கொண்ட குழுவினரிடம் இருந்தது.

 இவர்கள் பரிந்துரைப்படி ஒவ்வொரு ஆண்டும் 30 பள்ளிகள், 120 சமுதாயத் திடல்களுக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

 இவற்றுக்கு, விளையாட்டு உபகரணங்கள் வாங்க 150 ஊராட்சிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.1.65 கோடி வீதம் 3 ஆண்டுகளில் 450 ஊராட்சிகளுக்கு ரூ.4.95 கோடி செலவிடப்பட்டுள்ளது.

 உபகரணங்களை வழங்கும் ஒப்பந்ததாரர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், விதிமுறைப்படி உபகரணங்கள் நிறுவப்படவில்லை என்றும் பல பள்ளிகளில் உபகரணங்கள் விநியோகம் சரிவர நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

 இந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் பணி முடிக்கப்பட்ட 450 ஊராட்சிகளில், பல லட்சம் ரூபாய் ஊழல் நடந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

 ஒவ்வொரு ஊராட்சியிலும் கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து, டென்னிகாய்ட் திடல்கள் அமைத்து, ஒவ்வொன்றைச் சுற்றிலும் கான்கிரீட் கற்களைக் கொண்டு எல்லைக்கோடு அமைக்க வேண்டும். இதை அமைக்க ரூ.5,000 வரை செலவாகும்.

 ஆனால், பெரும்பாலான ஊராட்சிகளில் எல்லைக்கோடு அமைக்காமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது.

 சில பள்ளிகளில் ஒரு ஜோடி கால்பந்து கோல் கம்பங்கள், ஒரு ஜோடி கூடைப்பந்து கம்பங்கள் அமைப்பதற்குப் பதிலாக ஒரு கூடைப்பந்து கம்பம் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. இதுதவிர, பொருள்களை வழங்கியதிலும் மோசடி நடந்துள்ளது. பல பள்ளிகளுக்கு ஒரு ஜோடி கம்பத்துக்குப் பதிலாக ஒரு கம்பம் மட்டுமே வந்துள்ளது.

 பல சமுதாயத் திடல்களில் கிரிக்கெட் விளையாட்டுக்கான நெட், உயரம் தாண்டுதலுக்கான கம்பி, நீளம் தாண்டுதலுக்கான பலகை போன்றவை கிடையாது.

 அரசு ஒதுக்கீடு செய்த தொகையில் 3-ல் இரண்டு பங்கு தொகை மட்டுமே, உபகரணங்களுக்கும் நிறுவும் பணிகளுக்கும் செலவு செய்யப்பட்டுள்ளது.

 கிராமப்புற மாணவர்களின் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்ட விளையாட்டுத் திடல்கள் எதுவும் அவர்களது பயன்பாட்டில் இல்லை.

 வழங்கப்பட்ட உபகரணங்களும் பள்ளிகளின் அறைகளிலும், ஊராட்சித் தலைவர்கள் சிலரின் வீடுகளிலும் இருப்பதாக பரவலாகத் தெரிவிக்கப்படுகிறது.

 இந்நிலையில் இத் திட்டம் 2009-2010, 2010-2011 ஆகிய அடுத்த இரு ஆண்டுகளுக்கு 300 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

 எனவே, விளையாட்டுத் திடல்கள் அமைப்பதில் நடந்த மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.