முகப்பு
வேலூர்

கைத்தறி ஜவுளிப் பூங்கா அமைக்கப்படுமா?

குடியாத்தத்தில் கைத்தறி ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும் என கைத்தறி நெசவாளர்களும், உற்பத்தியாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Updated On : 24 அக்டோபர், 2015 at 3:47 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:32 PM

குடியாத்தத்தில் கைத்தறி ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும் என கைத்தறி நெசவாளர்களும், உற்பத்தியாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.

குடியாத்தம் கைத்தறி லுங்கி உற்பத்திக்கு பெயர் பெற்ற நகரம். குடியாத்தம், இதன் சுற்றுப்புறப் பகுதிகளில் சுமார் 9 ஆயிரம் கைத்தறிகள் இயங்குகின்றன.

கைத்தறி நெசவு, இதன் உப தொழில்களான ஆலை ஓடுதல், பாவு தோய்த்தல், வண்ணச் சாயமிடுதல், நூல் சுற்றுதல் ஆகியவற்றில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு உள்ளனர்.

Advertisement

இந்தப் பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலையும், நூலுக்கு சாயம் போட ஏற்ற நீர் வளமும் இத் தொழிலின் வெற்றிக்கு பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.

இங்கு 26 கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களும், டிரேட் மார்க் நிறுவனங்கள், சிறு, குறு, பெரு லுங்கி உற்பத்தியாளர்கள் என 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

நாகரிக உடைகளின் தாக்கம் நிறைந்த இந்தக் காலத்திலும் குடியாத்தம் கைத்தறி லுங்கிகளுக்கு உலகம் முழுவதும் மவுசு குறையவில்லை. இங்கு உற்பத்தியாகும் லுங்கிகள் தமிழகம் மட்டுமன்றி வட மாநிலங்களிலும் பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், இலங்கை, துபை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, மியான்மர், நேபாளம் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

எனவே இந்தத் தொழில் மேலும் அபிவிருத்தி அடைய இப்பகுதியில் கைத்தறி ஜவுளிப் பூங்காவை மத்திய-மாநில அரசுகள் அமைக்க வேண்டும். பொருளாதாரமும் வளர்ச்சியடையும். நவீன தொழில்நுட்பங்களும் உருவாகும்.

ஏற்றுமதி செய்தால் அரசு மானியம் 8.2 சதவீதம், கைத்தறி நெசவாளர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் நேரிடையாகக் கிடைக்கும். மேலும், அரசின் பல்வேறு சலுகைகளும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, குடியாத்தத்தில் கைத்தறி ஜவுளிப் பூங்கா அமைக்கவேண்டும் என்பது நெசவாளர்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகும்.

இதனை மத்திய அரசும், மாநில அரசும் நிறைவேற்ற வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.