பொலிவு பெறுகிறது திருவலம் ராஜேந்திரா இரும்புப் பாலம்!
சுமார் 76 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருவலம் ராஜேந்திரா இரும்புப் பாலத்துக்கு வண்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்ட பழைய இரும்புப் பாலம் புதுப்பொலிவு பெற்று வருவதாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சுமார் 76 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருவலம் ராஜேந்திரா இரும்புப் பாலத்துக்கு வண்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்ட பழைய இரும்புப் பாலம் புதுப்பொலிவு பெற்று வருவதாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்துக்கு உள்பட்ட திருவலம் பேரூராட்சியில் நீவா நதி என்னும் பொன்னை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சியில் 1939-ஆம் ஆண்டு இரும்புப் பாலம் நிர்மாணிக்கப்பட்டது.
இந்த இரும்புப் பாலப் பணிகள் ராபர்ட் எம்பர்சன் என்ற தலைமைப் பொறியாளரின் மேற்பார்வையில், சென்னையைச் சேர்ந்த ஜே.எச்.தாராப்பூர் பொறியியல் நிறுவனத்தினரால் 1935-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த இரும்புப் பாலம் சுமார் 10,000 டன் இரும்புத் தளவாடங்களைப் பயன்படுத்தி, 1,200 தொழிலாளர்களைக் கொண்டு ஆண்டு முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் நான்கு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.
சென்னை மாகாணத்திலேயே புதுமையான பாலமாக இந்த இரும்புப் பாலம் திகழ்ந்ததால், பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்கள் இந்தப் பாலத்தில் படமாக்கப்பட்டன.
இந்த இரும்புப் பாலம் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சென்னை- மும்பை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த இரும்புப் பாலத்தின் வழியாக திருவலத்தில் அமைந்துள்ள பாடல் பெற்ற திருத்தலமான அருள்மிகு தனுமத்யாம்பாள் உடனுறை வில்வநாதீஸ்வரர் கோயிலுக்கு வெளியூர்களில் இருந்து தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அம்முண்டியில் செயல்பட்டு வரும் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், வேலூர், காட்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ராணிப்பேட்டை பெல் நிறுவனத்துக்கும், சிப்காட் தொழில்பேட்டைக்கும் பணிக்குச் செல்லும் தொழிலாளர்களும் இந்தப் பாலத்தின் வழியாகத்தான் சென்று வருகின்றனர்.
மேலும், கெம்பராஜபுரம், சீக்கராஜபுரம் உள்ளிட்ட கிராமப்புறத்தினரின் வாகனங்களும், திருவலம் பேருந்து நிறுத்தத்துக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இந்தப் பாலத்தின் வழியாகச் சென்று வருகின்றன.
இந்தப் பழைய இரும்புப் பாலம் கடந்த சில ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்தது. இதைச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து, ஒரு சில தூண்களில் ஏற்பட்ட விரிசல்களைச் சரி செய்து வெள்ளி வண்ணம் (மெட்டாலிக் பெயின்ட்) பூசப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த இரும்புப் பாலத்துக்கு இதுவரை மின் விளக்கு வசதி இல்லாததால் இருளில் மூழ்கியுள்ளது. இதனால், விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, இந்த இரும்புப் பாலத்துக்கு மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து கடந்த மார்ச் 27-ஆம் தேதி "தினமணி' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேற்கண்ட இரும்புப் பாலத்துக்கு வெள்ளி வண்ணம் பூசும் பணியும், பாலத்தின் நுழைவுப் பகுதியில் சாலை விரிவுப்படுத்தும் பணியும் அண்மையில் நடைபெற்றன.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை இளநிலைப் பொறியாளர் வைத்தியலிங்கம் கூறியதாவது:
திருவலம் பழைய இரும்புப் பாலத்தின் தூண்கள் துருப்பிடிக்காமல் இருக்க மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வெள்ளி வண்ணம் பூசுவது வழக்கம். இந்தப் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. மேலும், பாலத்தின் நுழைவுப் பகுதியில் மிகக் குறுகலான சாலை உள்ளது. இதனால், இந்த வழியாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கின.
எனவே, பாலத்தில் இருந்து சுமார் 200 அடி தொலைவு வரை தடுப்புச் சுவர் எழுப்பி சாலை விரிவாக்கம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது என்றார்.
பழைய இரும்புப் பாலத்துக்கு மின் விளக்கு அமைக்கப்படுமா என அவரிடம் கேட்டபோது, இந்தப் பாலம் திருவலம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் பாலத்தின் இரண்டு தூண்களும், மீதமுள்ள பகுதி சீக்கராஜபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியிலும் வருவதால், பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள்தான் மின் விளக்கு வசதி செய்துகொள்ள வேண்டும் என்றார்.
இதுதொடர்பாக திருவலம் பேரூராட்சித் தலைவர் செல்வி சரவணணிடம் கேட்டபோது, பாலத்தின் பராமரிப்புப் பணிகள் அனைத்தையும் நெடுஞ்சாலைத் துறையினர் செய்து வருகின்றனர்.
ஆனால், அவர்கள் மின்விளக்கு அமைக்க முன்வருவதில்லை. அவர்களே பாலத்துக்கு மின்விளக்கு வசதி செய்ய நெடுஞ்சாலைத் துறையினர் முன்வர வேண்டும். நெடுஞ்சாலைத் துறையினர் பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களிடம் மின்விளக்கு அமைத்துக் கொள்ளலாம் என்ற உத்தரவாதக் கடிதம் அனுப்பினால் மின்விளக்கு வசதி செய்யத் தயாராக இருக்கிறோம் என்றார்.