தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வேட்பாளர்களின் பிரசாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்தில் பொதுமக்களை ஈர்த்து வாக்குகளை சேகரிப்பதற்காக பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றனர்.
முக்கியமாக பொதுக் கூட்டம் நடைபெறும் இடங்களுக்கு, பொதுமக்களை வரவழைப்பதற்காக இசைக் குழுக்களின் திரைப்பட மெல்லிசை கச்சேரிகளையும், ஆடல்- பாடல் நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர்.
இதன் விளைவாகவே கட்சிகள், பொதுக்கூட்டத்துக்கு எளிதாக பொதுமக்கள் கூட்டத்தை சேர்க்க முடிகிறது. அதே வேளையில் இசைக் குழுக்கள், ஆடல்-பாடல் பங்கேற்கும் கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
சென்னையைப் பொருத்தவரையில் திரைப்பட மெல்லிசை இசைக் குழுக்கள் 500-க்கும் மேற்பட்டவை உள்ளன. இவை ஏ,பி,சி என 3 பிரிவாக உள்ளன. இதில் சென்னையில் ஏ வகை இசைக் குழுக்கள் 20, பி வகை இசைக் குழுகள் 60, சி வகை இசை குழுக்கள் சுமார் 530 உள்ளன.
ஏ பிரிவு இசைக் குழுவில்...: இதில் ஏ பிரிவில் சுமார் 30-லிருந்து 40 இசைக் கலைஞர்கள் இடம்பெறுகின்றனர். இந்த இசைக் குழுகளில் திரைப்பட பாடல்களில் வருவது போன்று அனைத்து இசைக் கருவிகள் இசைக்கப்பட்டு, பாடல்கள் பாடப்படுகின்றன.
பி பிரிவு இசைக் குழுவில்...: பி வகை இசைக் குழுக்கள் சுமார் 60 உள்ளன. இந்த இசைக் குழுக்களில் வயலின், காற்று மூலம் இயங்கும் இசைக் கருவிகள் தவிர்த்து பெரும்பாலான இசைக் கருவிகள் இசைக்கப்படும். இந்த இசைக் குழுவில் சுமார் 20-லிருந்து 25 கலைஞர்கள் வரை இடம்பெற்றுள்ளனர்.
சி பிரிவு இசைக் குழுவில்...: சி வகை வகை இசைக் குழுக்களில் கீ போர்டு,தபேலா,டிரம் போன்ற இசைக் கருவிகள் மட்டும் இசைக்கப்படும். இந்த இசைக் குழுவில் அதிகபட்சமாக 10 கலைஞர்கள்தான் இருப்பார்கள்.
கட்டணம் எவ்வளவு? ஏ வகை இசைக் குழுக்கள் ஒரு பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சம் வரையும், பி வகை இசைக் குழுக்கள் ரூ. 75 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சம் வரையும், சி வகை இசைக் குழுக்கள் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரையும் கட்டணமாகப் பெறுகின்றனர்.
சி பிரிவுக்குத்தான் கிராக்கி: தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சிகள், அதிகமாக அழைப்பது சி வகை இசைக் குழுக்களைத்தான். ஏனெனில் இந்த வகை இசைக் குழுக்களுக்கு செலவு குறைவு என்பதால் அரசியல் கட்சிகள் இவர்களை அழைக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாகவே பி வகை இசைக் குழுக்களை அழைக்கின்றனர். ஏ வகை இசைக் குழுக்கள், அரசியல் கட்சிகளின் முதல் கட்டத் தலைவர்கள் பிரசாரத்துக்கு வரும்போது மட்டுமே அழைக்கப்படுகின்றனர்.
இது தொடர்பாக சென்னையில் இசைக் குழு நடத்தி வரும் சிவா கூறியது:
முகூர்த்த நாள்கள், கோயில் திருவிழா நாள்கள் ஆகிய காலங்களில் எங்களுக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் தேர்தல் நேரத்தில் வழக்கமாக கிடைக்கும் வாய்ப்பைக் காட்டிலும், சுமார் 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரை வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
சில இசைக் குழுக்கள் தேர்தல் முடியும் வரை ஒப்பந்த அடிப்படையில் ஒரே வேட்பாளருக்கோ அல்லது ஒரே அரசியல் கட்சிக்கோ நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். உள் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியைக் காட்டிலும், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு 30-லிருந்து இருந்து 35 சதவீதம் வரை கட்டணம் கூடுதலாக வசூலிக்கிறோம்.
பொதுவெளியில் நிகழ்ச்சிகளை நடத்துவதால் அதிகமான ஒலிபெருக்கி சாதனங்கள், தொழில்நுட்பக் கருவிகள், இசைக் கருவிகள், வண்ண விளக்குகள் போன்றவை பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகிறது. இதனாலேயே கூடுதல் கட்டணம் வசூலிக்கிறோம் என்றார்.
கவர்ச்சி குறையாத எம்.ஜி.ஆர்.: இதேபோல இசைக் குழு நடத்தி வரும் பெரம்பூரைச் சேர்ந்த விந்தை பாரதி தெரிவித்தது:
தேர்தல் பிரசாரங்களில், இன்றும் கவர்ச்சி குறையாமல் எம்.ஜி.ஆர். பாடல்களே இருக்கின்றன. எம்.ஜி.ஆர். பாடல்கள் அதிமுக பொதுக்கூட்டங்கள் மட்டுமன்றி, வேறு சில அரசியல் கட்சிக் கூட்டங்களிலும் பாடப்படுகின்றன. ஆனால் பொதுவாக தேர்தல் பிரசாரங்களில் எம்.ஜி.ஆர். பாடல்களால் மக்கள் ஈர்க்கப்படுவது போன்று, வேறு பாடல்களால் ஈர்க்கப்படுவதில்லை.
இதற்கு அடுத்தபடியாக விஜயகாந்த் பாடல்கள் உள்ளன. திமுக பொதுக்கூட்டங்களில் கொள்கை விளக்கப் பாடல்கள், நாகூர் ஹனிபா பாடிய பாடல்களைப் பாடுவோம் என்றார்.
தேர்தல் பிரசாரங்களினால் ஓவியர்கள், டிஜிட்டல் பேனர் அச்சிடுபவர்கள், சவுண்ட் சர்வீஸ் நிறுவனம் பலனடைவதைப் போல, இசைக் குழுவினரும் பலன் அடைகின்றனர். இன்னும் அதிகமாக அரசியல் கட்சிகள், தங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதே இசைக் குழுவினரின் கோரிக்கையாக உள்ளது.
-கே.வாசுதேவன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.