வேலூர்

பிறப்பு, இறப்பு குறித்து ஓராண்டுக்குப் பின் பதிவு செய்ய விண்ணப்பிப்போர் அலைக்கழிப்பு

DIN

ஆம்பூர் வட்டத்தில் 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறப்பு, இறப்பு பதிவு செய்யாமல் விடுபட்டவர்கள், சார் ஆட்சியரின் சுற்றறிக்கையை காரணம் காட்டி கிராம நிர்வாக அலுவலர்களால் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
 பிறப்பு, இறப்பு குறித்த தகவல் ஓராண்டுக்குள் பதிவு செய்யாமல் விடுபட்டிருந்தால், அதற்கான காலதாமதக் கட்டணத்தை செலுத்தினால் சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர்களாலேயே பதிவு செய்யப்படும்.
 பிறப்பு, இறப்பு நிகழ்ந்து ஓராண்டைக் கடந்திருந்து, அதைப் பதிவு செய்ய வேண்டுமானால் நீதிமன்ற உத்தரவின் மூலம்தான் பதிவு செய்ய வேண்டிய நடைமுறை முன்பு இருந்தது.
ஆனால், இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது வருவாய் கோட்டாட்சியர் அந்தஸ்துக்கு குறையாத பதவியில் உள்ள அதிகாரியால் விசாரணை நடத்தப்பட்டு காலதாமத பிறப்பு, இறப்பு பதிவு செய்ய ஆணை பிறப்பிக்கப்படும்.
 அதன்படி, வருவாய் கோட்டாட்சியர் அல்லது சார் ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியிடம், சம்பந்தப்பட்டவர்கள் பிறப்பு, இறப்பு பதிவு செய்யாமல் விடுப்பட்டதைக் கூறி, அதனை பதிவு செய்யக் கோரி மனு அளிக்க வேண்டும். அத்துடன் தாமதமானதற்கான, பிறப்பு, இறப்பு பதிவுக் கட்டணமாக கிராமங்களுக்கு ரூ. 10-ம், நகரங்களுக்கு ரூ. 20-ம் வீதம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தி அசல் ரசீதை இணைக்க வேண்டும்.
 மனுதாரரின் இருப்பிட சான்றுக்கான நகலையும், சம்பந்தப்பட்ட சார் பதிவாளரால் படிவம் 10-இல் வழங்கப்பட்ட பதிவின்மை சான்றின் அசலும் இணைக்க வேண்டும்.
 மேலும், சான்று உறுதி ஆணையர் (நோட்டரி பப்ளிக்) முன்னிலையில் கையெழுத்திட்ட ரூ. 20-க்கான பிரமாணப் பத்திர அசல் சான்றையும் இணைக்க வேண்டும். ஆவணங்கள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரின் விசாரணைக்காக அனுப்பி வைக்கப்படும்.
 மனுதாரரின் கோரிக்கை மனு வட்டாட்சியர் அலுவலகம், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு ஆட்சேபனைகள் ஏதும் வருகிறதா என பார்க்கப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு கிராம நிர்வாக அலுவலர்கள் கையெழுத்து பெற்று அறிக்கை அளிப்பார்.
 இதையடுத்து வட்டாட்சியர் தமது அறிக்கையை 21 நாள்களுக்குள் சார் ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும். பிறகு மனுதாரரிடம் சார் ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியரால் நேரடி விசாரணை நடத்தப்பட்டு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்.
 இறுதி உத்தரவு கிடைக்கப் பெற்ற ஒரு வாரத்துக்குள் பிறப்பு அல்லது இறப்பு பதிவு செய்யப்பட்டு சான்று வழங்கப்படும். இதுவே தற்போது நடைமுறைக்கு வந்துள்ள புதிய வழிமுறையாகும்.
 இந்நிலையில் ஆம்பூர் வட்டத்தில் 2004-ஆம் ஆண்டுக்கு பின்னர் நிகழ்ந்த பிறப்பு அல்லது இறப்பு பதிவு செய்யப்படாமல், விடுபட்டு ஓராண்டுக்கு மேலாகி, பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளவர்கள் காலதாமதப் பதிவை பதிவு செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் சார் ஆட்சியர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளபடி, சம்பந்தப்பட்ட சார் பதிவாளரால் படிவம் 10-இல் பதிவின்மை சான்று பெறப்பட்டு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 ஆம்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 2004-ஆம் ஆண்டு வரையில்தான் பிறப்பு மற்றும் இறப்பு குறித்தப் பதிவேடுகள் உள்ளன. 2004-ஆம் ஆண்டுக்குப்பிறகு நிகழ்ந்த பிறப்பு, இறப்பு குறித்த பதிவேடுகள் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்திலேயே உள்ளன. சார் பதிவாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் 2004-ஆம் ஆண்டுக்கு பிறகு நிகழ்ந்த பிறப்பு, இறப்பை பதிவு செய்வதற்காக சார் பதிவாளரிடம் இருந்து பதிவின்மைச் சான்று பெறுவதற்கு சென்றால் அந்த அலுவலகத்தில் 2004-ஆம் ஆண்டு வரை மட்டுமே பதிவேடுகள் உள்ளன. அதன்பிறகு நடந்த பிறப்பு, இறப்பு குறித்த பதிவேடுகள் தங்களிடம் இல்லை, அதனால் பதிவின்மைச் சான்று வழங்க இயலாதெனக் கூறி மனுதாரர்களை திருப்பி அனுப்புகின்றனர். இதனால் மனுதாரர்கள் அலைக்கழிப்புக்கு உள்ளாகின்றனர்.
 எனவே 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகான பதிவேடுகளை சார் பதிவாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இல்லையெனில் வட்டாட்சியர் அலுவலகத்திலேயே பதிவின்மைச் சான்றை வழங்கி அதனை மனுவோடு இணைத்தால் அதை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் ஏற்க உரிய ஆணை பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT