முகப்பு
வேலூர்

ஆட்சியர் அலுவலகத்துக்கு  மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தொழிலாளி

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு, மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தொழிலாளியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 4:42 AM
பகிர்:

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு, மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தொழிலாளியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்களை ஆட்சியர் அலுவலக வாயிலில் நிறுத்தி சோதனையிட்டு அலுவலகத்துக்குள் அனுமதித்தனர். அப்போது, சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றார். அவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் வாணியம்பாடி, தேசமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பிரகாசம் (50) என்பதும், தொழிலாளியான இவர், அங்குள்ள கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டுவதாகக் கூறி, கடந்த பிப்ரவரி மாதம் இவரை அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் தாக்கியதாகத் தெரிகிறது. தொடர்ந்து, தன்னை தாக்கியவர்கள் மீது வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் மனமுடைந்த அவர், ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பிரகாசத்தை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். 
இதனிடையே, வேலூர் அனைத்து வணிகர்கள் சங்க பேரமைப்புத் தலைவர் ஆர்.பி.ஞானவேல் தலைமையில், புதிய பேருந்து நிலைய கடை வணிகர்கள் ஆட்சியரிடம் அளித்தமனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான 24 கடைகள் உள்ளன. இங்கு உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரி உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.
புதிய பேருந்து நிலையம் உருவானது முதலே 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் இந்த கடைகளை, அண்மைக்காலமாக இரவு 11 மணிக்குள் அடைத்துவிட வேண்டும் என போலீஸார் உத்தரவிடுகின்றனர். இதனால், அனைத்துக் கடைகளையும் 11 மணிக்குள் அடைத்து விடுகிறோம். இந்த கடைகளுக்கு மாதம் ரூ. 35 ஆயிரம் முதல் ரூ. 45 ஆயிரம் வரை வாடகை செலுத்துகிறோம். மேலும், தமிழகத்திலுள்ள பிற மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள பேருந்து நிலைய கடைகள் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் நிலையில், வேலூரில் மட்டும் 11 மணிக்குள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், வியாபாரிகளின் நலன் கருதி, புதிய பேருந்து நிலைய கடைகளை 24 மணி நேரமும் இயங்க அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தினர் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளுடன் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அப்போது, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் கோயில் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனினும், இந்த தடையை மீறி முக்கிய சில வழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. மாணவர்களின் நலன்கருதி அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். 
இதேபோல், குடிநீர் பிரச்னை, வீட்டுமனைப் பட்டா, மின்இணைப்பு, உதவித் தொகை என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 355 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.