முகப்பு
வேலூர்

ஆற்காடு கூட்டுறவு சங்கத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல்: அதிமுக-திமுகவினர் மோதல்

ஆற்காடு நகர் கூட்டுறவுக் கடன் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதில் அதிமுக-திமுகவினரிடையே திங்கள் கிழமை மோதல் ஏற்பட்டது.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 4:38 AM
பகிர்:

ஆற்காடு நகர் கூட்டுறவுக் கடன் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதில் அதிமுக-திமுகவினரிடையே திங்கள் கிழமை மோதல் ஏற்பட்டது.
ஆற்காடு நகர் கூட்டுறவுக் கடன் சங்க அலுவலகம் தோப்புகானா பகுதியில் உள்ளது. இதில் ஆற்காடு நகரம், ஆற்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட முப்பதுவெட்டி, தாஜ்புரா, சாத்தூர், உப்புபேட்டை, கூராம்பாடி, தாழனூர், வேப்பூர், நந்தியாலம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
 இந்தச் சங்கத்தின் 11 நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 16-ஆம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திங்கள் கிழமை வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அதிமுக, திமுக, பாமக ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தி நிர்வாக குழு உறுப்பினர்களை போட்டியின்றித் தேர்வு செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆற்காடு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.வி. பாண்டுரங்கன் சங்க அலுவலத்தில் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பம் பெற்றுள்ளார்.
 அதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பிவைத்தனர். 
இதனைத் தொடர்ந்து ஆற்காடு தொகுதி சட்ட பேரவை உறுப்பினர் அலுவலகத்திலிருந்து திமுக எம்எல்ஏ ஜே.எல். ஈஸ்வரப்பன் தலைமையில் திமுகவினர் ஊர்வலமாகச் சென்று வங்கியின் 11 நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிக்கும் வேட்பு மனுதாக்கல் செய்தனர். 
அதே போல் அதிமுக, பாமக, மதிமுக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 36 பேர் நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.