ரயிலில் வியாபாரியிடம் 1 கிலோ தங்கம் திருட்டு
ஜோலார்பேட்டை அருகே ரயிலில் நகை வியாபாரியிடம் 1 கிலோ தங்கக் கட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஜோலார்பேட்டை அருகே ரயிலில் நகை வியாபாரியிடம் 1 கிலோ தங்கக் கட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
வாணியம்பாடி அம்பூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஆனந்தன் (35). நகை வியாபாரியான இவர், ஆர்டரின் பேரில் நகைகளை செய்து விற்று வருகிறார்.
இந்நிலையில், ஆனந்தன் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் நகைகளை செய்வதற்காக தங்கக் கட்டியை வாங்க சென்னைக்குச் சென்றார். ரூ. 35 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ தங்கக் கட்டியை வாங்கிக் கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு சென்னையில் இருந்து ஆலப்புழா செல்லும் விரைவு ரயிலில் ஜோலார்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தார். தங்கக் கட்டியை தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துள்ளார்.
இரவு 11.30 மணியளவில் வாணியம்பாடி ரயில் நிலையம் வந்த போது பாக்கெட்டில் இருந்த தங்கக் கட்டி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தூங்கிக் கொண்டிருந்த போது தங்கக் கட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர்.