அரசு மதுக் கடை சுவரில் துளையிட்டு பணம் திருட்டு
வாணியம்பாடியில் அரசு மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு, ரூ. 3 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
வாணியம்பாடியில் அரசு மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு, ரூ. 3 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் ஏரிகரை அருகே தனியாருக்குச் சொந்தமான வாடகைக் கட்டடத்தில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. இங்கு விற்பனையாளர்களாக விநாயகம், மேகநாதன் ஆகிய இருவரும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் இருவரும் கடையைப் பூட்டிச் சென்றனர். இதையடுத்து மர்ம நபர்கள் நள்ளிரவில் கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே இருந்த ரூ. 3 ஆயிரம் ரொக்கத்தை மட்டும் திருடிச் சென்றனர். விற்பனையாளர்கள் சனிக்கிழமை காலை கடையைத் திறந்தபோது பணம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சனிக்கிழமை இரவு வரை புகார் எதுவும் தரப்படாததால் வழக்குப் பதிவு
செய்யப்படவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.