மொழி தெரியாத ஆசிரியர்கள் உருதுப் பள்ளிகளுக்கு கல்வி அதிகாரியாக நியமனம்: ஆட்சியரிடம் புகார்
மொழி தெரியாத ஆசிரியர்களை உருதுப் பள்ளிகளுக்கான கல்வி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
மொழி தெரியாத ஆசிரியர்களை உருதுப் பள்ளிகளுக்கான கல்வி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லம்பாஷா அளித்த மனு விவரம்:
தமிழகத்தில் உருது பள்ளியை நிர்வகிக்க வேலூர், சேலம், கடலூர் என 3 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வேலூர் மண்டலத்தில் 148 உருது பள்ளிகள் உள்ளன. 1925-ஆம் ஆண்டு முதல் உருது பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு என கல்வி அதிகாரி நியமிக்கப்பட்டு ஆய்வு செய்து வந்தார். ஆனால், அண்மையில் கல்வி மாவட்டங்கள் பிரித்து வெளியிடப்பட்ட அரசாணையில் உருது தெரியாத ஆசிரியர்கள் கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். உருது தெரிந்த அதிகாரிகளை நியமித்து ஆய்வு செய்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெமிலி வட்டம், காப்பூர் ஏரி விவசாயிகள்அளித்த மனு விவரம்: கடந்த 2017-ஆம் ஆண்டு ஏரிப் பாசன விவசாயிகள் நலச்சங்கம் தொடங்கப்பட்டு காப்பூர் ஏரியை பராமரித்து வருகிறோம். இந்த ஏரியின் குடிமராமத்து பணிக்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆளும்கட்சியினர் தூண்டுதலின்பேரில், சிலர் புதிதாக ஏரிப்பாசன சங்கம் அமைக்க முயன்று, இந்த குடிமராமத்து பணி மேற்கொள்ள முயற்சித்து வருவதாக அறிகிறோம். அந்த சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. இதனை அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.
வேலூர், அரியூர் மலைக்கோடி அண்ணா நகர், விஸ்வநாத நகர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, நம்பிராஜபுரம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: எங்கள் பகுதியில் சுமார் 3 ஆயிரம் வாக்குகள் உள்ளன. எங்களை 59-ஆவது வார்டில் சேர்ப்பதாக கடிதம் வந்துள்ளது. எங்களை அரியூர் 57-ஆவது வார்டிலேயே இணைக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ரௌடி வசூர் ராஜா மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையனிடம் மனு அளித்தார். அதில், தனது பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் பணம் வசூல் செய்வதாகவும், இதனால் போலீஸார் தன்னை அடிக்கடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துவதாகவும், தான் தவறு செய்வதில்லை, தனது பெயரைப் பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல், இலவச வீட்டுமனைப் பட்டா, மின் இணைப்பு, உதவித் தொகை என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 484 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், ஆதிதிராவிடர் நல அலுவலர் கஜேந்திரன், உதவி ஆணையர் (கலால்) பூங்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.