அரசுப் பேருந்தை சிறைபிடித்து காலிக் குடங்களுடன் சாலை மறியல்
வாணியம்பாடி அருகே துரிஞ்சிகுப்பத்தில் குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் வந்து கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடி அருகே துரிஞ்சிகுப்பத்தில் குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் வந்து கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை ஊராட்சிக்கு உள்பட்ட துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சீராக வழங்கவில்லை எனத் தெரிகிறது.
இதனால் சுமார் ஒரு கி.மீ. தொலைவு சென்று அப்பகுதி குடிநீர் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் பழுதடைந்த மின் மோட்டாரை பலமுறை அப்பகுதி மக்கள் சொந்த பணத்தில் பழுது பார்த்துள்ளனர். எனினும் மீண்டும் பழுதாகிவிட்டதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாயினர். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெள்ளக்குட்டை-வாணியம்பாடி சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை காலை காலிக் குடங்களுடன் சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைப் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த ஆலங்காயம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அப்போது கடந்த 6 மாதங்களாக குடிநீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும், தெரு விளக்குகள் உள்ளிட்டை அடிப்படை வசதிகள் இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு புகார்களைத் தெரிவித்தனர். பிறகு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, மறியலில் ஈடுபட்ட மக்களிடம் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் எனவும் உறுதியளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆம்பூரில்....
ஆம்பூர் அருகே குடிநீர் கோரி, அரசுப் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள், காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், அரங்கல்துருகம் ஊராட்சி சுட்டகுண்டா கிராமத்தில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த சில வாரங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. அதனால் கிராம மக்கள் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குச் சென்று, அங்குள்ள கிணற்றிலிருந்து குடிநீரை எடுத்துச் சென்றனர். அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் புகார் தெரிவித்தனர். ஆனால் குடிநீர் வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து, காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த உமர்ஆபாத் போலீஸார், அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.