முகப்பு
வேலூர்

ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்த சக்தி சேனா அமைப்பினர்

தமிழகம் முழுவதும் இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறி, சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தினர் ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்தனர்.

Updated On : 14 மே, 2018 at 11:48 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

தமிழகம் முழுவதும் இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறி, சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தினர் ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்தனர்.
வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தினர் சிலர், பாடையில் படுத்தபடி, நூதனமுறையில் வந்திருந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அதில், தமிழகத்தில் தொடர்ச்சியாக இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம், பொம்மநாயக்கன்பட்டியில் 20 ஆண்டுகளாக அங்குள்ள ஒரு பிரிவினரிடம் மதமாற்றம் செய்ய தாக்குதல் நடந்து வருகிறது. தவிர, அப்பகுதியில் இறந்த ஒருவரது உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்லும்போது, வேற்று மதத்தினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்துக்கள் மீதான இத்தகைய அச்சுறுத்தல்களைத் தடுக்க அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் ஆய்வு செய்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் கஸ்பா 47-ஆவது வார்டு பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், பொன்னியம்மன் கோயில் பகுதியில், 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் வீடுகளை சூழ்ந்து தேங்கியுள்ளது.
இதுதொடர்பாக, பலமுறை மனு அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து, இந்த பிரச்னையில் அதிகாரிகள் அலட்சியம் காட்டினால் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதுபோல், வீட்டுமனைப் பட்டா, மின்இணைப்பு, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 396 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட சமூகப் பாதுகாப்பு அலுவலர் பேபி இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.