வேலூர்

"பட்டப்படிப்புடன் ஆராய்ச்சிப் படிப்புகளையும் மேற்கொள்ள வேண்டும்'

DIN

மாணவர்கள் பட்டப்படிப்புடன் நின்று விடாமல் பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என வேலூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் மு.வளர்மதி கூறினார்.
குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 684 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி அவர் பேசியதாவது: நீங்கள் தான் இந்தியாவின் எதிர்காலம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேச கட்டமைப்பை உருவாக்குவதில் உயர்கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி ஒருவரின் அறிவை மட்டுமல்ல, செயல்பாடு, பண்புகள்  மற்றும் மதிப்பினை உயர்த்துகிறது.
 மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டிலேயே  இரண்டாவது மாநிலமாக தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தை நெருங்கியுள்ளது. தமிழகத்திலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் 24.91 லட்சம் மாணவர்கள் பட்டப் படிப்பிலும், 4.38 லட்சம் மாணவர்கள் பட்ட மேற்படிப்பிலும் சேர்ந்துள்ளனர். ஆராய்ச்சிப் படிப்பிலும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீங்கள் பட்டப் படிப்புடன் நில்லாமல், பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ள வேண்டும். சமுதாயம் பயனுறும் வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, கல்வியில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். படித்து முடித்த நீங்கள் வேலை தேடுபவராக மட்டுமின்றி, தொழில் முனைவோராகவும் முயற்சிக்க வேண்டும்.  வாழ்க்கையோடு போராடினால் தான் வரலாறு படைக்க முடியும். நீங்கள் அனைவரும் வரலாறு படைக்க வேண்டும். சாதனையாளர் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்றார் வளர்மதி. 
நிகழ்ச்சியில், பல்கலைக் கழகத் தர வரிசையில் இடம் பிடித்த 6 மாணவிகளுக்கு, பட்டத்துடன், பதக்கங்களையும் அவர் வழங்கினார். 
 கல்லூரி மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம், தலைவர் கே.எம்.ஜி. சுந்தரவதனம், செயலர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், இயக்குநர் த.கஜபதி, முதல்வர்எம்.ஜெயஸ்ரீராணி, துணை முதல்வர் மு.மேகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT