பொய் பிரசாரங்களால் அதிமுகவை வீழ்த்த முடியாது: அமைச்சர் நீலோபர் கபில்
திமுக மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் பொய் பிரசாரங்கள் மூலம் அதிமுகவை வீழ்த்த முடியாது என்று மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபில் பேசினார்.
திமுக மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் பொய் பிரசாரங்கள் மூலம் அதிமுகவை வீழ்த்த முடியாது என்று மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபில் பேசினார்.
வாணியம்பாடி நகரம் மற்றும் ஆலங்காயம் ஒன்றிய அதிமுக சார்பில் கட்சியின் 47-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் வாணியம்பாடி சந்தைப் பாலம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் நீலோபர் கபில் பேசியதாவது:
அதிமுகவை அழிக்க வேண்டும் என்று திமுகவும், டி.டி.வி. தினகரனும் தொடர்ந்து பொய் பிரசாரங்கள் செய்து வருகின்றனர். அவர்கள் என்ன பேசினாலும் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் காப்பாற்றப்பட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களால் வழிநடத்திச் செல்லப்படும் அதிமுகவை வீழ்த்த முடியாது. இனிவரும் காலங்களில் உள்ளாட்சி, சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்றார் அவர். தொடர்ந்து, கட்சியின் செய்தி தொடர்பாளர் பாபுமுருகவேல் பேசினார்.
கூட்டத்துக்கு, நகரச் செயலாளர் சதாசிவம் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கோபால், நகர அவைத் தலைவர் சுபான், அண்ணா தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் கோவிந்தராஜ், பேரூராட்சிச் செயலாளர்கள் பாண்டியன், பிச்சாண்டி, நகர கூட்டுறவு கட்டட சங்கத் தலைவர் டி.முஹம்மத் காஷிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றியச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கோவி.சம்பத்குமார் வரவேற்றார்.
தொடர்ந்து, 147 பெண்களுக்கு புடவை மற்றும் 147 ஆண்களுக்கு வேட்டிகளை அமைச்சர் வழங்கினார். கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் பி.மகேந்திரன், ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலாளர் சதீஷ்குமார், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிகள் கே.பி.மணி, கே.பி.ஜெயசக்தி, சிவானந்தம், பரமசிவம், அதிமுக நிர்வாகிகள் அருண், சுமையாபானு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் கே.பிரகாசம் நன்றி கூறினார்.