வேலூர்

ஆம்பூர் பகுதியில் தொடரும் மணல் கொள்ளை: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

DIN


ஆம்பூர் பகுதி பாலாற்றில் மணல் கொள்ளை அரசு அதிகாரிகள் கண்டகொள்ளாத காரணத்தால் தொடர்கிறது என பொதுமக்கள் தரப்பிலும், பாலாறு பாதுகாப்பு இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நீதிமன்ற உத்தரவு காரணமாக வேலூர் மாவட்டத்தில் இயங்கி வந்த அரசு மணல் குவாரிகள் மூடப்பட்டன. ஒரு சில பகுதிகளில் மட்டும் மாட்டு வண்டிகளில் மணல் எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால் கட்டுமானப் பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி மணல் கடத்தல் மூலம் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் வழிமுறைகளை தொடர்ந்து மணல் கடத்துவோர் பின்பற்றி வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக மணல் வண்டிகளில் உரிய அனுமதிச் சீட்டு பெற்று மணல் ஏற்றிச் செல்ல வேண்டும். இதிலும் பல்வேறு முறைகேடுகள் மூலம் மாட்டு வண்டிகளில் முறையற்ற வகையில் மணல் எடுத்துச் சென்று அதை ஒரு இடத்தில் சேர்த்து பின்னர் வாகனங்களில் கடத்திச் செல்வதாக கூறப்படுகிறது. இத்தகைய செயல்களை மணல் கடத்துவோர் தன்னிச்சையாக செய்ய முடியாது. இதற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் ஒருசிலர் உதவினால் மட்டுமே சாத்தியம். 
இதனால் மாட்டு வண்டிகள் மூலம் அதிக அளவில் மணல் கடத்துவோருக்கு அதிகாரிகள் தரப்பில் மறைமுகமாக உதவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மணல் கடத்தல் தொடர்பாக அதிகாரிகள் தரப்பிலும் எவ்வித தீவிர தடுப்பு அல்லது ரோந்துப் பணிகளையும் மேற்கொள்ளாததே இதற்குக் காரணம் என்கின்றனர் நகரவாசிகள்.
மணல் கடத்தலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடின்றி அரசியல் கட்சிகளின் போர்வையில் பலர் ஈடுபட்டு வருவது கண்கூடாக தெரிவதால், அதிகாரிகள் தரப்பில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சுவதாகவும் கூறப்படுகிறது.
மணல் வண்டிகளில் முறைகேடான வகையில் மணலை எடுத்துச் சென்று மறைவிடங்களில் சேமித்து அவற்றை டிப்பர் லாரிகள், டிராக்டர்கள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு கடத்துகின்றனர். 
இதைத் தடுப்பதற்கான முயற்சியை எந்த அதிகாரியும் எடுக்கவில்லை. பெயரளவில் அப்பாவிகள் சிலரை பிடித்து வழக்குகள் பதிவு செய்து கணக்குக் காட்டுவதுதான் வழக்கமான நடைமுறையாக உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
பொதுமக்கள் தரப்பில் அதிகாரிகளுக்கு மணல் கடத்தல் தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டால், உடனடியாக அதிகாரிகள் தரப்பில் மணல் கடத்துவோரை காப்பாற்றும் முயற்சிகள் நடைபெறுவதாகவும், பொதுமக்கள் டிராக்டர்கள், டிப்பர் லாரிகளை மடக்கிப் பிடித்து ஒப்படைத்தால் சிறிதுநேரத்தில் அவற்றை விடுவித்துவிடுவது வேதனையளிப்பதாகவும் பாலாற்று பாதுகாப்பு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் குறை கூறுகின்றனர்.
விழிப்புணர்வு தேவை: 
வேலூர் மாவட்டம் ஏற்கெனவே கருப்பு மாவட்டமாக உள்ளது. மணல் கடத்தலைத் தடுக்க நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். மக்களுக்கு மணல் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வும், எதிர்ப்புணர்வும் தேவை. அத்துடன் மணல் கடத்தல் விஷயத்தில் மாவட்ட ஆட்சியர் கடுமையான நடவடிக்கையை எடுப்பதோடு, அதற்கு துணைப் போகும் கீழ்மட்ட அளவிலான அலுவலர்களை கண்காணித்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மணல் கடத்தலை முழுமையாக தடுக்க முடியும். குறிப்பிட்ட சில இடங்களில் அரசு மணல் குவாரிகளைத் திறந்து அரசின் நேரடி கண்காணிப்பில் அவற்றை நடத்துவதன் மூலம் கனிம வளத்தைப் பாதுகாக்க முடியும் என்று பாலாறு பாதுகாப்பு இயக்கத்தின் வேலூர் மாவட்டத் தலைவர் ஏ.சி. வெங்கடேசன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT