குப்பையில் தயாரிக்கப்பட்ட நுண்ணுயிர் உரம் விநியோகம்
குடியாத்தம் நகராட்சியில் மக்கும் குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட 3 டன் நுண்ணுயிர் உரம்
குடியாத்தம் நகராட்சியில் மக்கும் குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட 3 டன் நுண்ணுயிர் உரம் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் புதன்கிழமை இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் குடியாத்தம் நகரில் உள்ள 36 வார்டுகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சிப் பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து எடுத்துச் சென்று உரக் கிடங்குகளில் சேமிக்கின்றனர்.
இதற்காக நகரில் உரம் தயாரிக்க 9 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தயாரிக்கப்பட்ட நுண்ணுயிர் உரங்கள் வீடுகளில் தோட்டம் வைத்துள்ள பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் இலவசமாக விநியோகிக்கப்பட்டது.
நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சுகாதார அலுவலர் மு.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர்
எஸ். செல்வபாலாஜி விவசாயிகளுக்கு உரங்களை வழங்கினார்.
சுகாதார ஆய்வாளர் பாண்டி செந்தில்குமார், களப் பணியாளர் பிரபுதாஸ், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.