வேலூர்

199 அரசு, நிதியுதவிப் பள்ளிகளில் மாணவர் காவல் மன்றம் தொடக்கம்

DIN

மாணவர்கள் காவல் துறையினருடன் இணைந்து செயல்படும் வகையில் வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 199 அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர் காவல் மன்றம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.  
இதற்கான தொடக்க விழா வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர் காவல் மன்றத்தை தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் பேசியது: 
நவீனக் கருவிகள் அனைத்தும் நமது நல்வழி வளர்ச்சிக்கு மட்டுமே உருவாக்கப்பட்டவை. ஆனால், அவற்றை தற்போதைய இளைஞர்கள் தவறான பழக்கத்துக்கு பயன்படுத்தும்படியாகி விட்டது. இதனால் பல்வேறு குற்றச்செயல்களுக்கும், பழக்கவழக்கங்களுக்கும் இளைஞர்கள்  உள்ளாகின்றனர். இது, அவர்களது ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் பாதிக்கிறது.
நாட்டிலுள்ள 120 கோடி மக்கள் தொகையில் 63 சதவீதம் பேர்  25 வயதுக்குள்பட்ட இளைஞர்களாவர். இந்த இளைஞர் சக்தியை நல்வழிப்படுத்தி வலிமையான இந்தியாவை உருவாக்கிட, அரசுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில்தான், மாணவர்கள் காவல் இயக்கத்தை மத்திய அரசு  2018-ஆம் ஆண்டு தொடக்கியது. 
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்திலும் மாணவர்கள் காவல் மன்றம் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் 8-ஆம் வகுப்பில் 22 மாணவ, மாணவிகள், 9-ஆம் வகுப்பில் 22 மாணவ, மாணவிகள் என 2 ஆண்டுகளில் 44 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற உள்ளனர். 
பயிற்சியின்போது, காவல் துறையுடன் இணைந்து பணியாற்றுவார்கள். இதன்மூலம், காவல் துறை மீது உள்ள தவறான எண்ணங்கள் மாறவும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவும் வாய்ப்பு ஏற்படும். மாணவர்கள் நல்வழியில் செல்லவும், தீய செயல்களில் ஈடுபடும்போது ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து கொண்டு அவற்றை விட்டு விலகி நல்வழியில் செல்லவும் இந்த பயிற்சி அவர்களுக்கு உதவும். 
இந்த மன்றத்தை ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் வழி நடத்துவர். இதன்மூலம் மாணவர்களுக்கு நேர்மையான சிந்தனை, சமூக பொறுப்புணர்வு, நாட்டுப்பற்று, தனது குடும்பம், சுற்றுப்புறத்தை நேசிக்கும் மனம், இயற்கையைப் பாதுகாப்பது போன்ற பல்வேறு நல்லொழுக்கங்கள் உயரும் என்றார் அவர்.
இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், துணை காவல் கண்காணிப்பாளர்கள் பழனிச்செல்வன், பாலகிருஷ்ணன், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், ஆசிரியர்கள், போலீஸார் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT