வேலூர்

சாலைகளில் பேனர், பதாகைகள் வைத்தால் சிறை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

DIN

சாலைகளில் விளம்பரப் பலகைகள், பதாகைகள் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க உள்ளாட்சி அலுவலர்களுக்கும், காவல் ஆய்வாளர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2018 டிசம்பர் 19-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பின்படி வேலூர் மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் வாகன ஓட்டிகளை திசை திருப்பக்கூடிய வகையிலும், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பிரதான சாலைகளின்  இருபுறங்கள், நடைபாதைகள், சாலைகளின் மத்தியில், பெரிய சாலைகள் ஆகியவற்றில் எந்தவொரு டிஜிட்டல் பேனர்களையோ, பதாகைகளையோ வைக்கக்கூடாது. 

இதேபோல், கல்வி நிறுவனங்கள், மதவழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், சாலைகளின் முனைகள், 100 மீட்டர் அளவுக்குள் உள்ள சாலை சந்திப்புகள், அங்கீகரிக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பிற இடங்களிலும் விளம்பரப்பலகைகள், பதாகைகளை நிறுவக்கூடாது.

தற்காலிக விளம்பர பலகைகள் அமைக்க நிகழ்ச்சிக்கு முன்பு 3 நாட்கள், நிகழ்ச்சி நடைபெறும் நாள், பின்பு 2 நாட்கள் என மொத்தம் 6 நாள்கள் மட்டுமே கால அளவாகும். மேலும், இரண்டு விளம்பரப் பலகைகளுக்கு இடையே 10 மீட்டர்  இடைவெளி  இருக்க வேண்டும். பொதுமக்கள் டிஜிட்டல் பேனர்கள், பதாகைகள் குறித்த புகாரை அவை அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட உள்ளாட்சி அலுவலர், காவல் ஆய்வாளரிடம் தெரிவிக்கலாம். 

விதிமுறை மீறுவோருக்கு ஓராண்டு சிறை அல்லது ரூ. 5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

எனவே, விளம்பர பலகைகள், பதாகைகள் அமைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகளை அரசியல் கட்சியினர், பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT