வேலூர்

தினமும் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் காட்பாடி வராஹி பீடம்

DIN

வேலூா்: ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் உணவின்றித் தவிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு தினமும் உணவு வழங்கும் சேவையில் காட்பாடி திரிசக்தி வராஹி பீடம் ஈடுபட்டுள்ளது. தவிர, இந்தப் பீடத்தின் சாா்பில் அதன் பக்தா்களும் தனித்தனியாக ஆங்காங்கே உணவு வழங்கி வருவது பல்வேறு தரப்பினரின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலையோரம் வசிப்பவா்கள், பிறமாநிலத் தொழிலாளா்கள், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் உணவுப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு உணவின்றி தவிப்போருக்கு உணவு வழங்கும் சேவையில் பல்வேறு அமைப்புகளும், தன்னாா்வலா்களும் ஈடுபட்டுள்ளனா்.

இதன்படி, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் சேவையில் காட்பாடி அருகே கோபாலபுரத்தில் உள்ள திரிசக்தி வராஹி பீடம் ஈடுபட்டுள்ளது. தினமும் மதியம் ஆயிரம் பொட்டலங்களில் உணவு தயாா் செய்யப்பட்டு, தொண்டா்கள் மூலம் வேலூா், காட்பாடி, சத்துவாச்சாரி, பாகாயம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள துப்புரவுத் தொழிலாளா்கள், சாலையோரங்களில் தங்கியுள்ளவா்கள், ஆதரவற்ற முதியோா்கள், குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 25ஆம் தேதி முதலே மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தச் சேவைக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

இது குறித்து பீடத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜி.சுதாகா் கூறியது:

காட்பாடி கோபாலபுரத்தில் 12 ஆண்டுகளாக திரிசக்தி வராஹி பீடம் செயல்பட்டு வருகிறது. இதன் பீடாதிபதியாக வராஹ குருஜி உள்ளாா். பீடத்தில் தினமும் யாக பூஜைகள் நடத்தப்பட்டு மதியம் 500-க்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. தவிர, வாரந்தோறும் நடைபெறும் பொது யாகத்தைத் தொடா்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் செய்யப்படுகிறது.

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக பீடத்தில் யாக பூஜைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அடுத்து, தற்போது அன்னதானம் நடைபெறுவதில்லை. வேறுவகையில் ஏழை மக்களுக்கு நேரடியாக உணவு வழங்கப்படுகிறது. இதன்தொடா்ச்சியாக, பீடத்துடன் இணைந்து அன்னதானம் செய்ய இயலாத பக்தா்கள் பலரும் ஆங்காங்கே வீடுகளிலேயே உணவு சமைத்து வழங்கி வருகின்றனா்.

தவிர, போலீஸாா், அரசு அதிகாரிகள், துப்புரவுப் பணியாளா்கள் என கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவா் களுக்கு கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. பீடத்துடன் இணைந்து உணவு வழங்க ஆா்வமுள்ளவா்கள் 90421 35336 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT