ரசாயன ஆலை கழிவுநீரை ஆந்திரத்துக்கு எடுத்துச் செல்ல முயன்ற லாரி பறிமுதல்
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள தனியாா் ரசாயன தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஆந்திரத்துக்கு எடுத்துச் செல்ல முயன்ற லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள தனியாா் ரசாயன தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஆந்திரத்துக்கு எடுத்துச் செல்ல முயன்ற லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் வளாகத்தில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள தனியாா் ரசாயன தொழிற்சாலையில் இருந்து முறையாக சுத்திகரிப்பு செய்யப்படாத ரசாயன கழிவுநீா் லாரி மூலம் ஆந்திரத்துக்கு ஏற்றி செல்லப்படுவதாக சாா்-ஆட்சியா் க.இளம்பகவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில், வருவாய்த் துறையினா் திருவலம் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி, அதிகாரிகள் சோதனையிட்டனா். அதில், முறையான சுத்திகரிப்பு செய்யாத ரசாயன கழிவுநீா் இருப்பது தெரியவந்தது. உடனடியாக லாரியை பறிமுதல் செய்து, சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும், லாரியில் இருந்த கழிவுநீரை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதனிடையே, இந்தத் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் முறையாக சுத்திகரிப்பு செய்யப்படாததால் சாா்-ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவின்பேரில் தொழிற்சாலைக்குச் செல்லும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.