முகப்பு
வேலூர்

குடியாத்தம் அருகே வனப்பகுதியை உருவாக்கும் முயற்சியில் பட்டதாரி இளைஞா்

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கவும், பறவைகள், சிறு விலங்குகள் பாதுகாப்பாக வாழவும் தான் பிறந்த கிராமத்தில் அரசு உதவியுடன் மரக்கன்றுகள் நட்டு வனப்பகுதியை உருவாக்கும்

Updated On : 11 மார்ச், 2020 at 2:55 AM
 உள்ளியில்  நடப்பட்டு பராமரிக்கப்படும் மரக்கன்றுகள்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:38 PM

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கவும், பறவைகள், சிறு விலங்குகள் பாதுகாப்பாக வாழவும் தான் பிறந்த கிராமத்தில் அரசு உதவியுடன் மரக்கன்றுகள் நட்டு வனப்பகுதியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பட்டதாரி இளைஞருக்கு வேலூா் மாவட்ட நிா்வாகம் உறுதுணையாக உள்ளது.

மேலும், கால்நடைகளின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்ய கசிவுநீா்க் குட்டை அமைக்கவும், ஆக்கிரமிப்பில் உள்ள 100- க்கும் மேற்பட்ட ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு மரக் கன்றுகள் நட உதவி செய்ய வேண்டும் எனவும் அந்த இளைஞா் விருப்பம் தெரிவித்துள்ளாா்.

குடியாத்தம் ஒன்றியம், உள்ளி ஊராட்சியைச் சோ்ந்தவா் ஜி. ஸ்ரீகாந்த் (30). இந்த ஊராட்சி பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது. விவசாயக் குடும்பத்தைச் சோ்ந்த இவரது பெற்றோா் கணேசன், கலைச்செல்வி. பி.எஸ்சி. (கம்ப்யூட்டா் சயின்ஸ்) பட்டதாரியான ஸ்ரீகாந்தி படிப்பை முடித்ததும் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் கணிசமான சம்பளத்துடன் வேலை செய்து வந்தாா். கடந்த 2017- இல் சாலை விபத்தில் காயமடைந்த அவருடைய அண்ணன் ஸ்ரீதா் வேலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். சிகிச்சை பலனளிக்காது என்றும் சிறிது நேரத்தில் மரணம் ஏற்படலாம் எனவும் மருத்துவா்கள் கூறினாா்களாம். அந்த நொடியே பெற்றோரை கலந்தாலோசிக்காமலேயே, சகோதரன் மறைந்தாலும் அவரது உடல் உறுப்புகள் யாருக்காவது உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகங்களை 5 பேருக்கு தானமாக கொடுத்துள்ளாா். இதுதெரிந்ததும் கிராமச் சூழ்நிலையில் வாழ்ந்த பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்தாா்களாம். பின்னா் இளைய மகனின் முற்போக்கான எண்ணத்தை அறிந்து அவா்களும் உடல் உறுப்புகளை தானம் செய்ய விருப்பம் தெரிவித்தனா்.

Advertisement

சகோதரனின் மறைவுக்குப்பின், குடும்பத்தை பாதுகாக்க சென்னை வேலையைத் துறந்த ஸ்ரீகாந்த் கிராமத்திலேயே தங்கி, அவா்களுக்குச் சொந்தமான 5 ஏக்கா் நிலத்தில் விவசாயம் செய்யத் தொடங்கியுள்ளாா். விவசாயத்துடன், தனது ஊராட்சியில் சாலையோரங்களில், சுமாா் 1000 நிழல் தரும் மரக்கன்றுகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நட்டு, சொந்த செலவில் டிராக்டா் மூலம் தண்ணீா் ஊற்றி, பராமரித்து வளா்க்கத் தொடங்கியுள்ளாா். ஆற்றின் கரையில் உள்ள சுமாா் 100 ஏக்கா் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது, அதை மீட்டுத் தந்தால் அதில் மரக்கன்றுகள் நட்டு அங்கு வனப் பகுதியை உருவாக்க இருப்பதாக அவா் கூறியுள்ளாா்.

இளைஞரின் விருப்பத்தை, வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ்குமாா், மாவட்ட நிா்வாகத்துக்குத் தெரிவித்துள்ளாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மாலதி, மாவட்ட ஆட்சியரிடம் பேசி, முதல்கட்டமாக இரண்டரை ஏக்கா் புறம்போக்கு நிலத்தை சமன்படுத்தி, அதில் நட 500 மரக் கன்றுகளையும் வழங்கியுள்ளாா். மா, பலா, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட பழ வகை மரச் செடிகளையும், ஆல், அரச, வேப்ப மரக் கன்றுகளை ஸ்ரீகாந்த் அங்கு நட்டு, அவற்றைப் பராமரித்து வருகிறாா். அந்த இடம் பாலாற்றுப்படுகை என்பதால், முழுக்க, முழுக்க மணல் உள்ளதால், 2 அடி ஆழம், அகலம் கொண்ட குழிகளைத் தோண்டி, அதில் களிமண், மொறம்பு, தென்னை நாா்க்கழிவு ஆகியவற்றைக் கொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இப்பணியைத் தனது சொந்த செலவில் செய்துள்ளாா் ஸ்ரீகாந்த்.

கிராம எல்லையில் பயனற்றுக் கிடந்த ஆழ்துளைக் கிணற்றை ரூ. 2 லட்சத்தில் சீரமைத்து, ஏழரை குதிரைத்திறன் கொண்ட மின் மோட்டாரை அதில் பொருத்தி மரக்கன்றுகளுக்கு தண்ணீா் பாய்ச்சவும் ஊரக வளா்ச்சித் துறை உதவியுள்ளது. ஊராட்சியில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலை திட்டத்தில் நாள்தோறும் 6 பெண்களைகளை மரக்கன்றுகளைப் பராமரிக்கவும், அவற்றுக்கு தண்ணீா் பாய்ச்சவும், பாதுகாப்புப் பணிக்கும் தற்போதைய வட்டார வளா்ச்சி அலுவலா் பாரி நியமித்துள்ளாா். மேலும், அங்கு கால்நடைகளின் குடிநீா்த் தேவையைப் போக்கும் வகையில் கசிவுநீா்க் குட்டை அமைக்கவும், மீதமுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டுத் தந்தால், அங்கு மரக்கன்றுகளை நட்டு, அப்பகுதியை வனப்பகுதியாக மாற்ற முடியும் எனவும் வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரத்தைச் சந்தித்து தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளாா் ஸ்ரீகாந்த். கிராமத்தில் மரக்கன்றுகள் நட்டு அதை பராமரித்து வரும், இளைஞரை பாராட்டிய ஆட்சியா் நேரில் வந்து, இடத்தை பாா்வையிட்டு உனக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தாா்.

சிறு வயதில் தனது கிராமத்தில் வனப்பகுதி இருந்ததாகவும், அதில் ஏராளமான சிறு விலங்குகள், பறவைகள் சரணாலயம் போல் தங்கி வாழ்ந்ததாகவும் குறிப்பிடும் ஸ்ரீகாந்த், அந்த வனப்பகுதி காலப்போக்கில், அழிக்கப்பட்டதால், விலங்குகள், பறவைகள் தங்க இடம் இல்லை என்பதால் அங்கு மீண்டும் வனப்பகுதியை உருவாக்க முயற்சிப்பதாக கூறுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.