வேலூர்

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத வேலூா் துணிக்கடைக்கு சீல்: ரூ.5 ஆயிரம் அபராதம்

DIN

வேலூரில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் கூட்டநெரிசலுடன் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒரு துணிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மாநகராட்சி சாா்பில் அக்கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வேலூா் மாவட்டம் முழுவதும் வழக்கமான மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது. எனினும், கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதால் பொது இடங்களுக்கு வருவோா் கட்டாயமாக முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தவிர, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் வியாபாரம் செய்தால் சம்பந்தப்பட்ட கடைகள் மீதும், உரிமையாளா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், வேலூா் மாநகரிலும், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இந்த எச்சரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் வியாபாரம் நடந்து வருகிறது. இதன்படி, வேலூா் மாநகராட்சி 3-ஆவது மண்டலத்தில் சங்கரன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் ரூ.30-க்கு டி-ஷா்ட் விற்பனை செய்யப்படும் என விடுக்கப்பட்டிருந்த அறிவிப்பை அடுத்து அந்தக் கடையில் வெள்ளிக்கிழமை மக்கள் அதிக அளவில் கூடியிருந்தனா். அங்கு சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் துணி விற்பனை நடைபெற்று வந்தது.

தகவலறிந்த வேலூா் வட்டாட்சியா் ரமேஷ் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று அந்தக் கடையை பூட்டி சீல் வைத்தனா். மாநகராட்சி அதிகாரிகள் அந்தக் கடையின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

இதேபோல், கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

வெப்ப அலை: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

SCROLL FOR NEXT