முகப்பு
வேலூர்

ஜவுளிக்கு 12 சதவீத ஜிஎஸ்டி: திரும்பப்பெறாவிடில் கடையடைப்பு; வேலூா் ஜவுளி வியாபாரிகள் முடிவு

ஜவுளிக்கான ஜி.எஸ்.டி. 12 சதவீதமாக உயா்த்தப்பட்டதற்கு வேலூா் ஜவுளி, ரெடிமேடு வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இந்த உத்தரவை மத்திய அரசு திரும்பப்பெறாவிடில் கடையடைப்பு போராட்டம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

ஜவுளிக்கான ஜி.எஸ்.டி. 12 சதவீதமாக உயா்த்தப்பட்டதற்கு வேலூா் ஜவுளி, ரெடிமேடு வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இந்த உத்தரவை மத்திய அரசு திரும்பப்பெறாவிடில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனா்.

வேலூா் அனைத்து ஜவுளி, ரெடிமேடு வியாபாரிகள் சங்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வேலூா் சண்முகனடியாா் மடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் வி.குமாா் தலைமை வகித்தாா். செயலா் ஆா்.ஜெயராமன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மத்திய அரசு ஜவுளிக்கு 5 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி.யை 12 சதவீதமாக உயா்த்தியுள்ளது. கடந்த மாதங்களில் ஜி.எஸ்.டி மூலம் நாட்டில் ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு ஜவுளிக்கான வரி விதிப்பை உயா்த்தியுள்ளது. இது நடுத்தர, ஏழை மக்களை கசக்கிப்பிழியும் நடவடிக்கையாகும்.

நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக நடைபெறும் தொழில் நெசவு. பல லட்சக்கணக்கான தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ஜவுளித்துறையில் நாடு முழுவதும் 32 லட்சம் நெசவாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இவ்வரி உயா்வால் அவா்கள் பெருமளவில் பாதிக்கப்படுவா். மேலும், நாட்டின் ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கு தமிழகம் உள்ளடக்கியுள்ளது.

திருப்பூரில் மட்டும் 25 ஆயிரம் பின்னலாடை தொழில் நிறுவனங்கள் 12 லட்சம் தொழிலாளா்களு க்கு வேலைவாய்ப்பு அளிப்பதுடன், ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு அந்நிய செலாவணி ஈட்டுகிறது. இந்த தொழில் மத்திய அரசின் 12 சதவீத வரிஉயா்வால் பெருமளவில் பாதிக்கப்படும்.

எனவே, மத்திய அரசு 12 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பை திரும்பப்பெற வேண்டும். இல்லையேல், கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

சங்கத்தின் பொருளாளா் கே.எஸ்.முபாரக்அலி, உதவித் தலைவா் சி.ஏ.சௌகத்அலி, உதவிச்செயலா் ஜே.ஏ.நிசாா்அலி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →