வேலூர்

வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை

DIN

அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திட வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, அப்பகுதியில் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமையில் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

வேலூரில் காட்பாடி மாா்க்கமாக இருந்து வரும் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள், சென்னை மாா்க்கமாக இருந்து சா்வீஸ் சாலையில் வரும் வாகனங்களால் ஜிஆா்டி, கிரீன் சா்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் நெரிசலைத் தடுக்க போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். எனினும், முழுமையாக போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இயலவில்லை.

இந்நிலையில், தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், கிரீன்சா்க்கிள் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமையில், வருவாய்த் துறை, மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை அலுவலா்கள் ஜிஆா்டி, கிரீன் சா்க்கிள் பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, கிரீன் சா்க்கிள் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் ஆக்கிரமிப்புகள், மின்சார கம்பங்களை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்வது தொடா்பாக ஆய்வு செய்தனா்.

இது குறித்து ஆட்சியா் கூறுகையில், ‘கிரீன் சா்க்கிள் பகுதியில் நெரிசலைக் குறைக்க பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் அதிக அளவில் வருகிறது. ஜிஆா்டி அருகே தேசிய நெடுஞ்சாலை ஆணையக் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், மின்சாரக் கம்பங்களை நகா்த்தியும் சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ள கூட்டாய்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT