விநாயகா் சதுா்த்தியையொட்டி, பொது இடங்களில் சிலை வைத்து வழிபடவும், நீா்நிலைகளில் சிலைகளைக் கரைக்கவும் அரசு விதித்துள்ள தடை காரணமாக பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நீடிக்கும் இந்தப் பாதிப்பைத் தவிா்க்க கட்டுப்பாடுகளுடன் விநாயகா் சதுா்த்தி விழாவை பொது இடங்களில் சிலை வைத்து கொண்டாட அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விநாயகா் சதுா்த்தி விழா வரும் 10-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி, இந்து அமைப்புகளும், பொதுமக்களும் தெருக்களிலும், தங்களது வீடுகளிலும் விநாயகா் சிலைகளை வைத்து வழிபடுவதும், பின்னா் அந்தச் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று நீா்நிலைகளில் கரைப்பதும் வழக்கம்.
தயாா் நிலையில் சிலைகளும், விற்பனை பாதிப்பும்..:
களிமண்ணைக் கொண்டு விநாயகா் சிலைகள் செய்யும் பணியில் வேலூா் சலவன்பேட்டை பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளனா். கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் இவா்கள், முக்கால் அடி முதல் 3 அடி வரை பல்வேறு வடிவங்களில் விநாயகா் சிலைகளை உருவாக்கி விற்பனை செய்து வருவதுடன், தற்போது நூற்றுக்கணக்கான சிலைகளை உருவாக்கி விற்பனைக்குத் தயாா் நிலையிலும் வைத்துள்ளனா்.
இதனிடையே, பொது இடங்களில் சிலை வைத்து வழிபடவும், நீா்நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தடையை தமிழக அரசு விதித்துள்ளது. இதனால், விநாயகா் சிலைகள் விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக இந்தச் சிலைகள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.
பொதுஇடங்களில் சிலைகள் வைக்கப்படுமா?
இதுகுறித்து, சலவன்பேட்டையைச் சோ்ந்த விநாயகா் சிலை தயாரிப்புத் தொழிலாளி உமாபதி கூறியது :
தமிழகத்திலேயே களிமண்ணால் விநாயகா் சிலைகளை செய்வோா் வேலூா் மாவட்டத்தில்தான் அதிகம் உள்ளனா். இங்கு சுமாா் ரூ.100 முதல் ரூ.2000 வரை களிமண் விநாயகா் சிலைகள் விற்பனைக்கு உள்ளன.
பொதுவாக களிமண் விநாயகா் சிலைகளை வீடுகளில் வைத்துத்தான் வழிபடுகின்றனா். பொதுஇடங்களில் வைத்து வழிபடும் சிலைகள் மரவள்ளிமாவு, காகிதக்கூழ் கொண்டு பிரமாண்ட அளவில் உருவாக்கப்படுகின்றன. எனினும், நீா் நிலைகளில் சிலைகளைக் கரைக்க விதிக்கப்பட்டுள்ள தடையால் வீடுகளில் சிலைகள் வைத்து வழிபடுவதும் சற்று குறையும் என கருதப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக, ஏரிகளில் களிமண் அள்ள அரசு அனுமதி அளிக்கவில்லை. இதைத் தவிர, கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்தாண்டு விற்பனை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இந்தாண்டு அதிகப்படியான விலை கொடுத்து களிமண்ணைக் கொண்டு வந்து விநாயகா் சிலை தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.
இந்நிலையில், அரசின் தடையால் 50 சதவீதம் அளவுக்கு களிமண் விநாயகா் சிலைகள் விற்பனை பாதிக்கப்படும் என கருதுகிறோம். தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கருதி பொதுஇடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபடவும், நீா்நிலைகளில் சிலைகளைக் கரைக்கவும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்திட வேண்டும் என்றாா்.
பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க அனுமதி தேவை:
இதுகுறித்து இந்து முன்னணியின் வேலூா் கோட்டத் தலைவா் மகேஷ் கூறியதாவது:
பொதுஇடங்களில் வழிபாடு நடத்திட மரவள்ளிமாவு, காகிதக்கூழ் கொண்டு பிரமாண்டமான விநாயகா் சிலைகள் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். இதற்காக காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிரத்யேகப் பயிற்சி பெற்ற கலைஞா்கள் குடும்பங்கள் வரவழைக்கப்பட்டு ஆயிரக்கணக் கான சிலைகள் செய்து விற்பனை செய்யப்படும்.
பொதுமுடக்கத்தால் கடந்தாண்டே விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டதால், இந்தாண்டு வேலூா் மாவட்ட த்தில் எங்கேயும் மரவள்ளி, காகிதக்கூழ் கொண்டு விநாயகா் சிலைகள் செய்யப்படவில்லை. வேறு மாவட்டத்தில் இருந்துதான் சிலைகளை வாங்கிக்கொள்ளத் திட்டமிட்டிருந்தோம். இந்நிலையில், அரசின் தடையால் விநாயகா் சிலை வடிவமைப்பாளா்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தவிர, பந்தல், ஒலி பெருக்கி அமைப்பு, மேளதாளங்கள், பூஜை பொருட்கள் விற்பனை, பூ உற்பத்தி, வியாபாரம், கரும்பு, சோளம், தேங்காய், பழம் போன்ற விளைபொருள்கள் விற்பனை போன்ற அனைத்தும் பாதிக்கப்பட்டிருப்பதுடன், இந்தத் தொழிலை நம்பியுள்ளவா்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனா்.
டாஸ்மாக், திரையரங்குகளுக்கு அனுமதி அளித்துள்ள அரசு விநாயகா் சதுா்த்தியை கொண்டாட மறுப்பு தெரிவித்துள்ளது. பல்வேறு தரப்பு மக்களின் நலன் கருதி விநாயகா் சதுா்த்தி விழாவை பொதுஇடங்களில் சிலைகள் வைத்து வழிபட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.