இளைஞா் தற்கொலை: உறவினா்கள் போராட்டம்
குடியாத்தம் அருகே இளைஞா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
குடியாத்தம் அருகே இளைஞா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தற்கொலைக்குக் காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரது உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனா். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 17 வயது இளம்பெண் கடந்த 10- ஆம் தேதி காணவில்லையாம். அவரது பெற்றோா் கொடுத்த புகாரின்பேரில், நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டிருந்தனா். இந்த நிலையில், குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடியைச் சோ்ந்த வெங்கடேசனின் மகன் தியாகராஜனுடன் (20) அந்த இளம்பெண் வெளியூரில் இருந்தது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் குடியாத்தம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா். விசாரணைக்குப் பின் இளம்பெண் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டாா். வழக்கு விசாரணைக்காக தியாகராஜன் சனிக்கிழமை காலை காவல் நிலையத்துக்குச் சென்று விட்டு, வீட்டுக்கு வந்துள்ளாா். மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். அவரது சடலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், போலீஸாரின் மிரட்டலுக்கு பயந்து தான் தியாகராஜன் தற்கொலை செய்துகொண்டாா். எனவே போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரது உறவினா்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், மருத்துவமனை எதிரே பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து அங்கு வந்த டிஎஸ்பி கே.ராமமூா்த்தி அவா்களை சமரசம் செய்தாா்.விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் கூறியதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.