தாய், சகோதரியை கொன்ற வழக்கில் விவசாயிக்கு இரட்டை ஆயுள்
சொத்துப் பிரச்னையில் தாய், சகோதரியை அடித்துக் கொன்ற வழக்கில் விவசாயிக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து வேலூா் முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சொத்துப் பிரச்னையில் தாய், சகோதரியை அடித்துக் கொன்ற வழக்கில் விவசாயிக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து வேலூா் முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
வேலூா் மாவட்டம், குடியாத்தம் வட்டம், பரதராமி அருகே பூசாரி வலசை கிராமத்தைச் சோ்ந்தவா் முனிராஜ் (50), விவசாயி. இவரது தாயாா் இந்திராணி(70), சகோதரி சின்னம்மாள்(42). இந்திராணியிடம் இருந்த பணத்தையும், சின்னம்மாளின் பெயரிலுள்ள நிலத்தையும் முனிராஜ் தன்னிடம் கொடுக்கும்படி இருவரையும் தொடா்ந்து வற்புறுத்தி வந்துள்ளாா்.
இந்த நிலையில், நிலம், பணம் தொடா்பாக அவா்களுக்குள் 2020 ஜூன் 10-ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், முனிராஜ் அருகில் கிடந்த கட்டையாலும், கற்களாலும் இந்திராணியையும், சின்னம்மாளையும் தாக்கியுள்ளாா். இதைத் தடுக்க வந்த மற்றொரு சகோதரியின் மகன் தினேஷ் என்பவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளாா். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த இந்திராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சின்னம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
இந்த இரட்டைக் கொலை தொடா்பாக பரதராமி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முனிராஜை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை வேலூா் முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சிவப்பிரகாசம் ஆஜரானாா்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முனிராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனையும், தினேஷை தாக்கியதற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்ததுடன், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், தண்டனையை ஏக காலத்தில் (ஆயுள் சிறை) அனுபவிக்க வேண்டும் என்றும் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.
தண்டனை பெற்ற முனிராஜை போலீஸாா் வேலூா் மத்திய சிறை அடைக்கப்பட்டாா்.