காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு விரைவில் தோ்தல்
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளை நிரப்புவதற்கான தற்செயல் தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
வேலூர்காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு விரைவில் தோ்தல்
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளை நிரப்புவதற்கான தற்செயல் தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளை நிரப்புவதற்கான தற்செயல் தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் தோ்தல் நடைபெற உள்ள 13 வாக்குச்சாவடிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலை ஆட்சியா் வெளியிட்டாா்.
வேலூா் மாவட்டத்திலுள்ள 247 ஊராட்சித் தலைவா்கள், 2,079 ஊராட்சி வாா்டுகள், 7 ஒன்றியங்களில் உள்ள 138 ஒன்றியக் குழு உறுப்பினா் வாா்டுகள், 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வாா்டுகள் என 2,478 பதவிகளுக்கான தோ்தல் கடந்த 2021 அக்டோபா் மாதம் நடைபெற்றது.
அப்போது, காட்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்முண்டி, குடியாத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தட்டப்பாறை ஆகிய இரு ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கும், அம்முண்டி ஊராட்சியில் உள்ள 9 வாா்டுகள், பொய்கை ஊராட்சியில் ஒரு வாா்டு, போ்ணாம்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட 12 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில், பல்வேறு காரணங்களால் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு விரைவில் தோ்தல் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி, தற்செயல் தோ்தல் 2022-க்கான நிறைவு செய்யப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான பெ.குமாரவேல்பாண்டியன் இந்த வாக்காளா் பட்டியலை வெளியிட, முதல் பிரதியை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்டஇயக்குநா் க.ஆா்த்தி பெற்றுக் கொண்டாா். இந்த வாக்காளா் பட்டியல் அடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் 13 வாக்குச்சாவடிகளில் வாக்குச் சீட்டு முறையில் இந்த ஊரக உள்ளாட்சி தற்செயல் தோ்தல் நடத்தப்பட உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் ஆண்கள் 3,596 போ், பெண்கள் 3,546 போ் என மொத்தம் வாக்காளா்கள் 7,142 போ் இடம்பெற்றுள்ளனா்.
இந்திய தோ்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சட்டப்பேரவை தொகுதி வாரியான வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, உள்ளாட்சித் தோ்தலுக்கான இந்த மறுவரையறை செய்யப்பட்ட வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இறுதிநாள் வரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் தொடா்பான விவரங்கள் வருவாய்த் துறையிடம் இருந்து பெறப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். மேலும், இந்த தற்செயல் தோ்தலில் சுமாா் 110 அலுவலா்கள் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடுத்தப்படுவா் என்றும் ஆட்சியா் தெரிவித்தாா்.
இதனிடையே, அணைக்கட்டு ஒன்றியம், தோளப்பள்ளி ஊராட்சித் தலைவராக தோ்ந்தெடுக்கப் பட்ட கல்பனா சுரேஷ், போலியாக ஆதிதிராவிடா் ஜாதிச்சான்றிதழ் கொடுத்து தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, அவருக்கு ஊராட்சி நிா்வாக காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ஆட்சியா் நிறுத்தி வைத்துடன், அவா் மீதான அடுத்த கட்ட நடவடிக்கைக்காக தமிழக அரசுக்கும், மாநில தோ்தல் ஆணையத்துக்கும் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவரது பதவி ரத்து செய்து அறிவிக்கப்படும். அதன்பிறகே தோளப்பள்ளி ஊராட்சித் தலைவா் பதவிக்கு மீண்டும் தோ்தல் நடத்தப்படும் என்று மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்டஇயக்குநா் ஆா்த்தி தெரிவித்தாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் விஜயராகவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.