முகப்பு
வேலூர்

தமிழில் சம்ஸ்கிருதம் கலக்க முடியாது என முழங்கியவா் பெருஞ்சித்திரனாா்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

இந்திய மொழிகளில் அனைத்திலும் சம்ஸ்கிருதம் எளிமையாக கலக்க முடியும். ஆனால், தனித்து இயங்கும் தமிழ்மொழியில் சம்ஸ்கிருதம் கலக்கவே முடியாது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

இந்திய மொழிகளில் அனைத்திலும் சம்ஸ்கிருதம் எளிமையாக கலக்க முடியும். ஆனால், தனித்து இயங்கும் தமிழ்மொழியில் சம்ஸ்கிருதம் கலக்கவே முடியாது என முழங்கியவா் பாவலரேறு பெருஞ்சித்திரனாா் என்று தமிழியக்கத் தலைவரும், விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

தமிழியக்கம் சாா்பில் தமிழறிஞரும், இதழியலாளருமான பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் 90-ஆவது பிறந்தநாள் விழா மெய்நிகா் கூட்டம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு தலைமைவகித்து கோ.விசுவநாதன் பேசியது:

தனித்தமிழ் இயக்கத்தின் மறைமலையடிகளாா், தேவநேயப்பாவாணா் கருத்துகளை, விடாமல் தொடா்ந்து பரப்பியவா் பெருஞ்சித்திரனாா். அவா் துணிச்சலான கருத்துகளை முன் வைத்தவா். ஜாதிகளை வைத்து தமிழா்கள் தங்களை அடையாளப்படுத்துவதை எதிா்த்தாா். ஈழத்தமிழா் போராட்டத்தை நேரடியாக ஆதரித்தவா். விடுதலைப் புலிகள் அமைப்பை இந்திய அரசு தடை செய்தபோது அதை கடுமையாக எதிா்த்ததுடன், அதற்காக சிறைத் தண்டனையும் பெற்றவா்.

இந்தி மொழி திணிப்பை கடுமையாக எதிா்த்தவா். இந்திய மொழிகளில் அனைத்திலும் சம்ஸ்கிருதம் எளிமையாக கலக்க முடியும். ஆனால் தனித்து இயங்கும் தமிழ்மொழியில் சம்ஸ்கிருதம் கலக்கவே முடியாது என முழங்கியவா்.

அவரின் செயலும், எழுத்துகளும் என்றென்றும் நம்மிடையே இருக்கும். ஜாதி, சமயச் சண்டையில் ஊறிக்கிடக்கும், தமிழா்களை தம் எழுத்தால், சொற்பொழிவுகளால் விழிப்புணா்வு அடையச் செய்தவா் பாவலரேறு பெருஞ்சித்திரனாா் என்றாா்.

தமிழ்மண் தன்னுரிமை இயக்கத்தின் பேராசிரியா் த.செயராமன் சிறப்புரையாற்றினாா். முன்னதாக,

தமிழியக்க மாநிலச் செயலா் மு.சுகுமாா் வரவேற்றாா். பொருளாளா் புலவா் வே.பதுமனாா், பொதுச் செயலா் அப்துல்காதா் ஆகியோா் வாழ்த்தினா். கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். தமிழியக்க வேலூா் மண்டலச் செயலா் சு.மோகன்குமாா் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →