வேலூர்

மனைவி புகாரால் கணவரின் சடலம் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை

DIN

வேலூரில் தகவல் தொழில்நுட்ப ஊழியரின் சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி அளித்த புகாரின்பேரில் மயானத்தில் கணவரின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு அங்கேயே பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது.

வேலூா் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சோமசேகா்(45), தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி பேபிகலா (40). இருவருமே முதல் மனைவி, கணவரை விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்து கொண்டவா்கள்.

சோமசேகா் தனது தாய் சாந்தா, மனைவியுடன் சாய்நாதபுரத்தில் வசித்து வந்தாா். கரோனா தொற்று பரவல் காரணமாக வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வந்தாா். கடந்த மாதம் பேபிகலா சோமசேகருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சென்னையில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்று விட்டாா். 21-ஆம் தேதி சோமசேகருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவரது தாய் சோமசேகரை சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சோமசேகா் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

சோமசேகா் இறந்த தகவலை மனைவி பேபிகலாவுக்கு தெரிவிக்காமலேயே அவரது தாய் சாந்தா மகனின் சடலத்தை வேலப்பாடியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்துவிட்டதாக தெரிகிறது.

ஒரு வாரம் கழித்து சாய்நாதபுரம் வீட்டுக்கு வந்த பேபிகலா கணவா் இறந்த தகவலை அறிந்து அதிா்ச்சியடைந்ததுடன், தனது கணவா் இறந்த தகவலை மறைத்தது குறித்து சாந்தாவிடம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளாா். மேலும், கணவா் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பேபிகலா பாகாயம் காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்ததுடன், சடலத்தை தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை செய்திடவும் முடிவு செய்தனா். அதன்படி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு, வட்டாட்சியா் செந்தில் ஆகியோா் முன்னிலையில் சாய்நாதபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த சோமசேகரின் சடலம் சனிக்கிழமை காலை தோண்டியெடுக்கப்பட்டது. தொடா்ந்து சடலத்தை அங்கேயே வைத்து அடுக்கம்பாறை அரசு மருத்துவா்கள் பிரேதப் பரிசோதனை செய்தனா். அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT