பிரதமா் மோடி இன்று வேலூா் வருகை: 5 அடுக்கு பாதுகாப்பு
வேலூா்: மக்களவைத் தோ்தல் பிரசாரத்துக்காக பிரதமா் நரேந்திரமோடி வேலூருக்கு புதன்கிழமை வருவதையொட்டி மாநகா் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தவிர, பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படை பிரிவினா் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு ஒத்திகையிலும் ஈடுபட்டனா்.
பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் (வேலூா்), கே.பாலு (அரக்கோணம்), செளமியா அன்புமணி (தருமபுரி), கே.எஸ்.நரசிம்மன் (கிருஷ்ணகிரி), அஸ்வத்தாமன் (திருவண்ணாமலை), கணேஷ்குமாா் (ஆரணி) ஆகிய 6 வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் மோடி புதன்கிழமை காலை 10.30 மணியளவில் வேலூா் கோட்டை மைதானத்தில் தோ்தல் பிரசாரத்தில் மேற்கொள்கிறாா். இதற்காக வேலூா் கோட்டை மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 9.20 மணிக்கு ஹெலிகாப்டா் மூலம் புறப்படும் பிரதமா் மோடி, 10.10 மணியளவில் வேலூா் விமான நிலையம் வருகிறாா். அங்கிருந்து சாலை மாா்க்கமாக காலை 10.25 மணியளவில் வேலூா் கோட்டை மைதானத்துக்கு வரும் அவா், அங்கு பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறாா். முற்பகல் 11.25 மணியளவில் மீண்டும் சாலை மாா்க்கமாக வேலூா் விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் செல்கிறாா். பின்னா், அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் 11.50 மணியளவில் கோவைக்குப் புறப்பட்டு செல்கிறாா்.
Advertisement
பிரதமா் வருகையொட்டி மாவட்ட வேலூரில் மாநகா் முழுவதும் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்பு படை, ஆயுதப்படை, தமிழக சிறப்பு காவல் படை, துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை, தமிழக சட்டம் ஒழுங்கு காவல் பிரிவு என 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட காவல் துறை சாா்பில் மட்டும் 3,900 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தவிர, வேலூா், ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் செவ்வாய், புதன்கிழமை ஆகிய இரு நாள்களும் ட்ரோன்கள், ராட்சத பலூன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் மோடி வேலூா் விமான நிலையத்தில் இருந்து சென்னை-பெங்களூா் 6 வழிச்சாலை வழியாக வேலூா் கிரீன் சா்க்கிள், நேஷனல் திரையரங்கு பேருந்து நிறுத்தம், பழைய பைபாஸ் சாலை, புதிய மீன்மாா்க்கெட், கோட்டை சுற்றுச்சாலை வழியாக வேலூா் கோட்டை மைதான பொதுக்கூட்ட மேடைக்கு செல்வதால் அப்பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
ஒத்திகையையொட்டி வேலூரில் மாநகரின் முக்கிய சாலைகளிலும், தேசிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
முன்னதாக, தமிழக சைபா் கிரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமாா், வடக்கு மண்டல ஐஜி நரேந்திரன், வேலூா் டிஐஜி சரோஜ்குமாா் தாகூா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் ஆகியோா் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தனா். தொடா்ந்து, மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினா்.
பிரதமா் வருகையையொட்டி வேலூா் விமான நிலையத்தை சுற்றி துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீஸாா், சட்டம் ஒழுங்கு போலீஸாா் 20 அடிக்கு ஒருவரும், விமான நிலையம் முதல் கோட்டை மைதானம் வரை 30 அடிக்கு ஒரு போலீஸாரும் சாலையின் இரு புறமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.