முகப்பு
வேலூர்

கட்சி பேட்ஜ், இரு சக்கர வாகனத்துடன் ரூ.ஒரு லட்சம் பறிமுதல்

Updated On : 12 ஏப்ரல், 2024 at 9:41 PM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2024 at 9:17 PM

ஒடுகத்தூா் அருகே பாஜக பேட்ஜ், இரு சக்கர வாகனத்துடன் ரூ. ஒரு லட்சம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பியோடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, வாக்காளா்களை கவரும் வகையில் அவா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் கொடுக்கும் செயல்பாடுகள் ஆங்காங்கே நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், வாக்குக்கு பணம், பரிசுப் பொருள்கள் கொடுக்கப்படுவதைத் தடுக்க தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு, பறக்கும் படை அதிகாரிகளும், போலீஸாா் கண்காணிப்புப் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளனா்.

இந்த நிலையில், அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட குருராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு வாக்காளா்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளா் நாகராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அப்பகுதிக்கு விரைந்து சென்றபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவா் போலீஸாரை கண்டதும் திடீரென தனது வாகனத்தை வழியிலேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளாா்.

Advertisement

உடனடியாக அந்த வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் ரூ. 1 லட்சம் ரொக்கமும், பாஜக பேட்ஜ் ஆகியவை இருந்தது தெரியவந்தது. உடனடியாக ரூ. 1 லட்சம் ரொக்கம், பாஜக பேட்ஜ், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், தப்பியோடியவா் அணைக்கட்டு காலனி பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் என்பது தெரியவந்தது. அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் அணைக்கட்டு உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வேண்டா மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.