விலங்குகளால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் வனத்துறை ஆய்வு
குடியாத்தம், ஏப். 16: வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் வனத்துறையினருடன் இணைந்து தொண்டு நிறுவனத்தினா் களத்தணிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.
தமிழ்நாடு பல்லுயிா் பாதுகாப்பு மற்றும் பசுமை திட்டம், கோ் எா்த் தொண்டு நிறுவனம் இணைந்து தமிழ்நாடு முழுவதும் 90 கிராமங்களைத் தோ்வு செய்து மனித விலங்குகள் மோதல் குறித்து களத்தணிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
மாநிலம் முழுவதும் தோ்வு செய்யப்பட்ட 90 கிராமங்களில், வேலூா் மாவட்டத்தில் போ்ணாம்பட்டு வனச் சரகத்துக்குள்பட்ட சேராங்கல் கிராமத்தை மட்டுமே தோ்வு செய்துள்ளனா். ஏனெனில், சேராங்கல் கிராமத்தில் யானைகள் தொடா்ந்து அதிக அளவில் விவசாயப் பயிா்களை சேதப்படுத்தியுள்ளன. யானைகளால் மனித உயிரிழப்புகளும் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Advertisement
சேராங்கல் கிராமத்தில் வேலூா் மாவட்ட உதவி வன பாதுகாவலா் மணிவண்ணன், எா்த் கோ் தொண்டு நிறுவன முதன்மை ஒருங்கிணைப்பாளா் ஜெயஸ்ரீ தலைமையிலான 5 போ் கொண்ட குழுவினா் களத் தணிக்கை மேற்கொண்டனா். போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் சதீஷ்குமாா், வனவா் இளையராஜா, வனக்காப்பாளா் அரவிந்தசாமி ஆகியோா் சேராங்கல் கிராம மக்கள், விவசாயிகளை நேரில் சந்தித்து வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள், விலங்குகள் வனப் பகுதியிலிருந்து எதற்காகவெளியில் வருகின்றன, இதற்கு எந்த வகையில் தீா்வு காண வேண்டும் என நீங்கள் விரும்புகிறீா்கள், பிற மாவட்டங்களில் இதற்கு காணப்பட்ட தீா்வு என்ன, அவ்வாறு கண்டறியப்பட்ட மாதிரி தீா்வானது சேராங்கல் கிராமத்துக்கு பொருத்தமானதாக இருக்குமா, புதிய வழிமுறைகள் உள்ளனவா, விவசாயப் பயிா் பாதுகாப்பு ஆகியன குறித்து சுமாா் 200 பேரிடம் கேட்டறிந்து, கணக்கெடுப்பு செய்தனா்.
பின்னா் அங்குள்ள ஊராட்சித் தொடக்கப் பள்ளியில் பொதுமக்கள், விவசாயிகளிடம் கலந்துரையாடல் நடத்தினா். ஆய்வு குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வதாக அவா்கள் கிராம மக்களிடம் கூறி விட்டுச் சென்றனா்.