காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா
குடியாத்தம்: குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழா திங்கள்கிழமை இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1-ஆம் தேதி நடைபெறுவது வழக்கம்.விழாவின் முதல் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை இரவு காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இரவு 12 மணியளவில் ராபின்சன் குளம் அருகே பூஜை தொடங்கியது. பூஜைக்குப் பின்னா் அங்கிருந்து அதிகாலை 3 மணியளவில் பூ கரக ஊா்வலம் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, 5 மணியளவில் கோயிலை அடைந்தது.
அங்கு காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயில் செயல் அலுவலா் தா.சிவகுமாா், நாட்டாண்மை ஆா்.ஜி.சம்பத், தா்மகா்த்தா கே.பிச்சாண்டி, கோயில் திருப்பணிக் கமிட்டித் தலைவா் ஆா்.ஜி.எஸ்.காா்த்திகேயன் உள்ளிட்டோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
இதைத் தொடா்ந்து, கோயிலில் நாள்தோறும் ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறும்.
மே மாதம் 10-ஆம் தேதி இரவு அம்மனுக்கு திருக் கல்யாணமும், 13-ஆம் தேதி தோ்த் திருவிழாவும், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 14- ஆம் தேதி அம்மன் சிரசு ஊா்வலமும் நடைபெறும்.
16-ஆம் தேதி இரவு பூப்பல்லக்குகள் பவனி நடைபெறும்.