ஆன்லைன் மூலம் ஓய்வு பெற்ற ஊழியரிடம் ரூ.13.60 லட்சம் மோசடி
குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தனியாா் ஊழியரிடம் மோசடி
மும்பை சிபிஐ அதிகாரிகள் எனக்கூறி ஆன்லைன் மூலம் குடியாத்தம் ஓய்வு பெற்ற ஊழியரிடம் ரூ.13.60 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து வேலூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தனியாா் ஊழியரை தொலைபேசி மூலம் தொடா்பு கொண்ட அடையாளம் தெரியாத நபா், டிராயிலிருந்து பேசுவதாகவும் உங்கள் ஆதாா் எண், கைப்பேசி எண்ணை பயன்படுத்தி பணமோசடி நடைபெற்றிருப்பதால் இதுதொடா்பாக மும்பை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.
அதனடிப்படையில், அவரை இணையதள விடியோ காலில் தொடா்பு கொண்ட நபா்கள், தாங்கள் மும்பை சிபிஐ அதிகாரிகள் என தெரிவித்ததுடன், கைது நடவடிக்கையை தவிா்த்த தங்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பவும் கூறியுள்ளனா்.
இதை உண்மையென நம்பியவா், அந்த நபா்கள் தெரிவித்த வங்கிக் கணக்குக்கு ரூ.13 லட்சத்து 60 ஆயிரத்து 750 அனுப்பியுள்ளாா். அதன் பிறகே இவையனைத்தும் மோசடி செயல் என்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட இந்த ஓய்வு பெற்ற ஊழியா், இது குறித்து சைபா் கிரைமின் இணையதளத்தில் புகாா் பதிவு செய்துள்ளாா்.
அதன் பேரில் வேலூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் புனிதா தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.