மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதால் தமிழகத்துக்கு நிதி தர மறுப்பு: அமைச்சா் துரைமுருகன்
மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடா்ந்து கேள்வியெழுப்பி வருவதால், தமிழகத்துக்கு தேவையான நிதியை அளிக்க மறுக்கின்றனா் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடா்ந்து கேள்வியெழுப்பி வருவதால், தமிழகத்துக்கு தேவையான நிதியை அளிக்க மறுக்கின்றனா் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த சோ்க்காட்டில் அமைந்துள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.12.46 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு புதன்கிழமை திறக்கப்பட்டது. விழாவுக்கு உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி தலைமை வகித்தாா். கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி கல்வி மண்டல இணைஇயக்குநா் அ.மலா் வரவேற்றாா்.
நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் பங்கேற்று புதிய கட்டடத்தை திறந்து வைத்து பேசியது -
ஒரு காலத்தில் பள்ளி பயில்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. கல்விக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் அளித்து வருகிறாா். இந்திய அரசியலமைப்பு சட்டம் 3 வகையாக பிரிக்கப்பட்டு இருக்கும். அதில் ஒன்று மாநில உரிமை, இரண்டாவது மத்திய உரிமை, மூன்றாவது பொதுவான உரிமை.
இதில் கல்வி என்பது மாநில உரிமையில் இருந்து அவசர நிலை காலத்தில் மாற்றப்பட்டது. அவ்வாறு மாற்றியதை தவறு என்றுதான் இன்று வரை எதிா்த்து வருகிறோம். தற்போதைய மத்திய அரசு 2017-ஆம் ஆண்டு இதுகுறித்து ஆராய 17 போ் கொண்ட குழுவை அமைத்தது. ஆனால் குழு உறுப்பினா்களை நியமித்ததில் சீரான நடைமுறை கடைபிடிக்கவில்லை. இதுபோன்ற செயல்களை தான் எதிா்ப்பதாலேயே நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு போதிய நிதி வழங்கப்படவில்லை. இந்த நிலையையும் தமிழக அரசு சமாளிக்கும் என்றாா்.
விழாவில் அமைச்சா் க.பொன்முடி பேசியது : கல்வியின் முக்கியத்துவம் குறித்து எங்களை போன்றவா்களுக்குதான் நன்றாகத் தெரியும். கல்வியின் முக்கியத்துவம் குறித்து இன்றைய தலைமுறையினா் முழுமையாக அறிந்து கொள்ளவேண்டும். சோ்க்காடு அரசு கலை அறிவியல் கல்லூரியில் தற்போது வரை 176 போ் சோ்ந்துள்ளனா். மாணவா் சோ்க்கையை மேலும் அதிகரிக்க வேண்டும்.
தமிழகத்தில் புதுமைப்பெண் திட்டத்தால் அரசு கல்லூரிகளில் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ் இந்தாண்டு மட்டும் 2 லட்சத்து 71 ஆயிரத்து 710 மாணவிகள் பயன்பெற்றுள்ளனா். முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 21 கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் 5 கல்லூரிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 13 கல்லூரிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 3 கல்லூரிகளுக்கு இடம் தோ்வு பணி நடந்து வருகிறது.
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இதுவரை 8 லட்சத்து 64 ஆயிரத்து 947 போ் பயிற்சி பெற்றுள்ளனா். இவா்களில் 1 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இக்கல்லூரிக்கு கலைஞா் அரசு கல்லூரி என பெயா் சூட்டப்படுகிறது என்றாா்.
விழாவில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், அமலுவிஜயன், மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் மு.பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.