முகப்பு
இந்தியா

எண்ம தரவு பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக புதிய மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

எண்ம (டிஜிட்டல்) தரவு பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

Updated On : 13 மார்ச், 2026 at 8:02 PM
பகிர்:

எண்ம (டிஜிட்டல்) தரவு பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

2023-ஆம் ஆண்டின் எண்ம தரவு பாதுகாப்புச் சட்டம் மூலம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இது தனிப்பட்ட தகவல்களைப் பொதுநலனுக்காகக்கூட வெளியிடப்படுவதைத் தடுக்கிறது.

இந்தச் சட்டத்தின் பல பிரிவுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கடந்த பிப்.16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

அப்போது, ‘தரவு பாதுகாப்புச் சட்ட விவகாரம் சிக்கலாக உள்ளது. இதில் அடிப்படை உரிமைகள், தகவல் அறியும் உரிமை மற்றும் தன்மறைப்பு (பிரைவஸி) உரிமையைச் சமநிலைப்படுத்த வேண்டியுள்ளது. இதில் உள்ள வரம்புகளை சரிசெய்து, தனிப்பட்ட தகவல் என்றால் என்ன என்பதை வரையறுக்க வேண்டியுள்ளது’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மனுக்கள் தொடா்பாக மத்திய அரசு விரிவாகப் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் அஞ்சலி பரத்வாஜ், அம்ருதா ஜோரி ஆகிய இருவா் தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன் கீழ் பெறப்படும் தனிப்பட்ட தகவல்களைப் பகுப்பாய்வு செய்தல், பகிா்தல், மறு வெளியீடு செய்வதில் 2023-ஆம் ஆண்டின் எண்ம தரவு பாதுகாப்புச் சட்டப் பிரிவுகள் குறுக்கிட முடியாது; பொது நலனுக்காகத் தனிப்பட்ட தகவல் கையாளப்படுவதை அந்தச் சட்டப் பிரிவுகள் தடுக்க முடியாது என உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு தொடா்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது. அந்த மனுவை ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுடன் இணைத்து விசாரிக்க நீதிபதிகள் முடிவு செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →