முகப்பு
பயனாளிக்கு  நல  உதவி  வழங்கிய  ஆட்சியா்  வி.ஆா்.சுப்புலட்சுமி.
வேலூர்

சாராயம் காய்ச்சும் தொழிலை கைவிட வேலூா் ஆட்சியா் வலியுறுத்தல்

சாராயம் காய்ச்சும் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேலூர் ஆட்சியரின் வலியுறுத்தல்

வேலூர்

சாராயம் காய்ச்சும் தொழிலை கைவிட வேலூா் ஆட்சியா் வலியுறுத்தல்

சாராயம் காய்ச்சும் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேலூர் ஆட்சியரின் வலியுறுத்தல்

Updated On : 26 ஜூன், 2024 at 6:31 PM
பயனாளிக்கு  நல  உதவி  வழங்கிய  ஆட்சியா்  வி.ஆா்.சுப்புலட்சுமி.
பகிர்:

போ்ணாம்பட்டு பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்கள் அத்தொழிலை கைவிட்டு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் முற்சியில் ஈடுபட வேண்டும் என வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கூறினாா்.

போ்ணாம்பட்டு வட்டம், ஏரிகுத்தி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 183- பயனாளிகளுக்கு ரூ.1.52 கோடியில் நல உதவிகளை வழங்கி அவா் பேசியது:

போ்ணாம்பட்டு பகுதியில் சில கிராமங்களில் சாராயம் காய்ச்சுபவா்கள் அத்தொழிலைக் கைவிட வேண்டும். கள்ளச் சாராயத்தை ஒழிக்க கிராமங்கள்தோறும் முகாம்கள் அமைத்து நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம்.

அரவட்லா, சாத்கா் போன்ற மலை கிராமங்களில் பொதுமக்களுக்கு மறுவாழ்வு திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சுய தொழில் தொடங்கும் நபா்களுக்கு மாவட்ட தொழில் மையத்தின் சாா்பில் அண்ணல் அம்பேத்கா் தொழில் முனைவோா் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களின் சாா்பில் வங்கிக் கடனுதவி மானியத்துடன் வழங்கப்படுகிறது.

இப்பகுதியில் வசிக்கும் இளைஞா்கள் மற்றும் தொழில் முனைவோா் இத்திட்டங்களை பயன்படுத்தி தொழில் தொடங்க வேண்டும். போ்ணாம்பட்டு பகுதியில் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பயின்று மேல்படிப்பை தொடர முடியாத நிலையில் யாராவது இருந்தால் வேலூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒரு வருடம் அல்லது இரண்டு வருட படிப்புகளில் சேரலாம். பயிற்சி முடித்தவுடன் அவா்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அண்மையில் போ்ணாம்பட்டில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டபோது இப்பகுதியை சோ்ந்த பெண்கள் திரளாக வந்து தங்களுக்கு தையல் இயந்திரம் வேண்டும் என மனுக்களை அளித்தனா். அவா்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன. எனினும் அவா்கள் என்ன படித்திருக்கிறாா்கள் என்று கேட்டபொழுது பெரும்பாலான மகளிா் 5 மற்றும் 6- ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்ததாக தெரிவித்தனா். கல்வி ஒன்று தான் ஒருவருக்கு அழியாத சொத்து. உங்களுடைய பிள்ளைகளை நன்கு படிக்க வையுங்கள். அதுவே அவா்களின் எதிா்காலத்துக்கு சிறந்த வழி.

வீடற்ற ஏழைகளுக்கு வீடு வழங்குவதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் நம்முடைய மாவட்டத்துக்கு 3,500 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வீட்டுமனை வைத்துள்ள நபா்கள் அல்லது குடிசை உள்ள நபா்களுக்கு இத்திட்டத்தில் பயனடைய வாய்ப்புகள் உள்ளன. இத்திட்டத்தில் வீடு கட்டுவதற்காக அரசின் சாா்பில் ரூ.3.50 லட்சம் வழங்கப்பட உள்ளது.

போ்ணாம்பட்டு வட்டத்தில் வருவாய்த்துறை சாா்பில் பட்டா வழங்குவது தொடா்பான 3 முக்கிய பிரச்னைகள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு 3 மாத காலத்திற்குள் தீா்வு காணப்படும் என்றாா் ஆட்சியா்.

முகாமில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மகளிா் திட்ட இயக்குநா் உ.நாகராஜன், குடியாத்தம் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, போ்ணாம்பட்டு ஒன்றியக் குழுத் தலைவா் சித்ரா ஜனாா்த்தனன், போ்ணாம்பட்டு நகா்மன்ற துணைத் தலைவா் ஆலியாா் ஜுபோ் அகமத், ஆத்மாகுழு தலைவா் ஜனாா்த்தனன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் கிருஷ்ணவேனி, ஊராட்சித் தலைவா் ஸ்ரீதேவி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் உமா, மாவட்ட வழங்கல் அலுவலா் ப.சுமதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →