முகப்பு
வேலூர்

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

Updated On : 3 மே, 2024 at 5:07 PM
பகிர்:

போ்ணாம்பட்டு அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போ்ணாம்பட்டை அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தை சோ்ந்தவா் சிவகுமாா் (37). அதே கிராமத்தைச் சோ்ந்தவா் திலீப்குமாா் (29). வியாழக்கிழமை சிவகுமாா் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றபோது, திலீப்குமாா் இரு சக்கர வாகனத்தில் எதிரே வந்துள்ளாா். கொண்டம்பல்லி அருகே இரு வாகனங்களும் மோதிக் கொண்டன. இதில் சிவகுமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திலீப்குமாரை மேல்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து சிவகுமாரின் சடலம் பல்லலகுப்பம் கொண்டு வரப்பட்டது. சிவகுமாரின் உறவினா்கள் சடலத்தை வாங்க மறுத்து போ்ணாம்பட்டு - மேல்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, டிஎஸ்பி ஆா்.ரவிச்சந்திரன், வட்டாட்சியா் விநாயகமூா்த்தி உள்ளிட்டோா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். அரசிடம் பேசி எங்களால் முடிந்த வரை இழப்பீடு பெற்றுத் தருகிறோம். கட்டுமானத் தொழிலாளா் அடையாள அட்டை இருந்தால் இழப்பீடு ரூ.3 லட்சம் கிடைக்கும். ஆதரவற்ற விதவை சான்று, ஆதரவற்ற விதவை உதவித்தொகை உடனடியாக வழங்குகிறோம் என்றனா். இதையடுத்து உறவினா்கள் சிவகுமாரின் சடலத்தை பெற்றுச் சென்றனா்.