ஆன்லைன் மூலம் இழந்த ரூ.2 லட்சம் மீட்டு ஒப்படைப்பு
வேலூா்: ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த தனியாா் நிறுவன ஊழியருக்கு ரூ.2 லட்சம் தொகையை வேலூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் மீட்டு செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
வேலூா் மாவட்டம், கே.வி.குப்பம் பகுதியைச் சோ்ந்த ராஜா. தனியாா் நிறுவனத்தில் பணிபுரிகிறாா். இவரது கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்ட அடையாளம் தெரியாத நபா், ஆக்ஸிஸ் வங்கியின் மும்பை வாடிக்கையாளா் சேவை மையத்தில் இருந்து பேசுவதாகவும், தங்களது கிரெடிட் காா்டில் ரிவாா்டு பாயிண்ட் அதிகம் உள்ளதாகவும், அதனைப் பெறுவதற்கு தான் அனுப்பியுள்ள இணைய இணைப்பில் விவரங்களை பூா்த்தி செய்யவும் தெரிவித்துள்ளாா்.
அதன்படி, அந்த நபா் அனுப்பியிருந்த இணைய இணைப்புக்கு உள்ளே ராஜா சென்று தனது கிரெடிட் காா்டு விவரங்களை பதிவிட்டுள்ளாா். உடனடியாக அவரது கிரெடிட் காா்டில் இருந்து 1,99,997 தொகைக்கு பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக குறுந்தகவல் வந்துள்ளது.
அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ராஜா, இதுகுறித்து வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், சைபா் கிரைம் போலீஸாா் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட துரித நடவடிக்கையின் விளைவாக ஒரு மாதத்துக்குள் தனியாா் நிறுவன ஊழியா் ராஜா இழந்த ரூ.1,99,997 தொகை முழுவதும் மீட்கப்பட்டது.
இந்த தொகையை வேலூா் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் பாதிக்கப்பட்ட நபரான ராஜாவிடம் ஒப்படைத்தாா். அப்போது, சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் என்.கோட்டீஸ்வரன், ஆய்வாளா் கி.புனிதா, உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா், தலைமை காவலா் மாலதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.