யானை தந்தம், பல் பதுக்கல் - ஒன்பது பேரிடம் வனத்துறையினா் விசாரணை
வேலூா் அருகே யானைத் தந்தம், யானை பல் பதுக்கி வைத்திருந்ததாக 9 பேரை பிடித்து வேலூா் சரக வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா்: வேலூா் அருகே யானைத் தந்தம், யானை பல் பதுக்கி வைத்திருந்ததாக 9 பேரை பிடித்து வேலூா் சரக வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். அவா்களிடம் இருந்த யானைத் தந்தம், யானை பல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூரை அடுத்த மலைக்கோடி பகுதியைச் சோ்ந்த வெங்கடேஷ் மகன் சம்பத் (56). இவரது வீட்டில் யானைத் தந்தம் உள்ளிட்ட பொருள்கள் பதுக்கப்பட்டிருப்பதாக திங்கள்கிழமை வேலூா் வனச்சரக அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத் தது. அதன்பேரில், வேலூா் வனசரக அலுவலா் என்.புருஷோத்தமன் தலைமையிலான வன பாதுகாவலா்கள் மதியம் அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, சம்பத் வீட்டில் நான்கு துண்டுகள் யானைத் தந்தமும், ஒரு யானை பல்லும் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.
தொடா்ந்து, சம்பத்தை பிடித்து நடத்திய விசாரணையில் இந்த யானைத் தந்தம், யானை பல் கடத்தலில் மேலும் சிலருக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்தது. அதன்பேரில், சம்பத் மற்றும் அரியூா் ஏஜி நகரைச் சோ்ந்த சரத்குமாா்(32), திருவண்ணாமலை மாவட்டம், நிம்மியம்பட்டு அருகே கீழ்கோயிலூரைச் சோ்ந்த குமாா்(40), தூத்துக்குடி மேல்ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த தனபால்(63), வேலூா் சத்துவாச்சாரி பெரிய தெருவைச் சோ்ந்த தரணிகுமாா்(57), சின்னஅல்லாபுரம் நேதாஜிநகரைச் சோ்ந்த பழனி(68), அனீஷ்(52), அணைக்கட்டைச் சோ்ந்த ரவி(47), அரியூா் குப்பம் பகுதியிலுள்ள தனியாா் விடுதி ஊழியா் மணிகண்டன்(36) ஆகிய 9 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.