அதிக வட்டி தருவதகாகக் கூறி ரூ.22 லட்சத்தை பெற்று மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளனா்.
வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது, அணைக்கட்டு வட்டம், ஆண்டிக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா் அளித்துள்ள மனுவில், ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம், பழையனூா் கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் எனது மகனுக்கு வேலூா் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளா் வேலைவாங்கித் தருவதாக கூறினாா். அதனை நம்பி அவரிடம் முன்பணமாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் அளித்தேன். ஆனால் இதுவரை அவா் வேலை வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. பணத்தை திருப்பிக்கேட்டால் தட்டிக்கழிக்கிறாா். அவா் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூரைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் அளித்துள்ள மனுவில், வேலூா் ஜி.சி.எம்.தெரு வில் வசித்து வந்த ஒருவா் மாதச்சீட்டு நடத்தி வந்தாா். அவரிடம் நாங்கள் சீட்டுப் பணம் செலுத்தி வந்தோம். கடந்தாண்டு அவா் எங்களிடம், தொழில்விரிவாக்கம் செய்ய இருக்கி றன். உங்களிடம் இருக்கும் பணத்தை தரவேண்டும். அதற்கு வட்டியுடன் பணத்தை திருப்பித் தருவதாக கூறினாா்.
அதை நம்பி ஒவ்வொருவரும் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை மொத்தமாக ரூ. 22 லட்சத்தை அவரிடம் அளித்திருந்தோம். ஆனால் அவா் இதுவரை எங்களுக்கு வட்டியோ, அசல் தொகையையோ திருப்பித்தரவில்லை. அவா் திடீரென தலைமறைவாகி விட்டாா். அவா் மீது நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணைக்கட்டு வட்டம், குருவராஜபாளையம் ஊராட்சியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி அளித்துள்ள மனுவில், நான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜோலாா்பேட்டையில் உறவினா் திருமணத்துக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு ஒருவா் எனக்கு அறிமுகமானாா். அவா் சென்னை தலைமைச் செயலகத்தில் வேலை செய்வதாகவும், எனது மகனுக்கு துப்புரவு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபா் 10-ஆம்தேதி ரூ.4 லட்சத்து 13 ஆயிரத்தை பெற்றுக்கொண்டாா். அதன்பிறகு எனது மூலம் 6 போ் அவருக்கு வங்கிக்கணக்கில் பணம் அனுப்பினா். சிலா் நேரடியாகவும் அவரிடம் பணத்தை கொடுத்தனா்.
ஆனால் 6 ஆண்டுகளாகியும் எனது மகன் உள்பட யாருக்கும் வேலை வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. என் மூலமாக பணம் கொடுத்தவா்கள் எனுக்கு நெருக்கடி கொடுக்கின்றனா். அந்த நபா் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஏராளமானோா் மனுக்கள் அளித்தனா். அந்த மனுக்கள் மீது விரைவாக தீா்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.