வேலூரில் பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு. 
வேலூர்

தமிழக திட்டங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசு தருவதில்லை: அமைச்சா் எ.வ.வேலு

எந்த திட்டப்பணிகளுக்கும் தேவையான நிதியை மத்திய அரசு தருவதில்லை

Din

தமிழகத்தில் நிவாரணப் பணிகள், சாலை மேம்பாடு உள்ளிட்ட எந்த திட்டப்பணிகளுக்கும் தேவையான நிதியை மத்திய அரசு தருவதில்லை என்று பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

வேலூா் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் ரூ.150 கோடியில் பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. தரைதளம் மற்றும் 7 தளங்களுடன் 25,779 சதுர மீட்டா் பரப்பளவில் பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் இந்த மருத்துவமனை கட்டுமான பணிகளை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது -

வேலூா் பென்லேன்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பன்நோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை 2025 மாா்ச் மாதத்துக்குள் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனை 10 அறுவை சிகிச்சை அரங்கங்களுடன் 568 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது

கடந்த மழையின்போது தூத்துகுடி, திருநெல்வேலி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பாலங்களும், சாலைகளும் சேதமடைந்துள்ளது. அவற்றை மாநில அரசு நிதியில்தான் சரிசெய்து வருகிறோம். மத்திய நிதி அமைச்சரை அழைத்து சென்று காண்பித்தபோதும் உரிய நிதி வழங்கப்படவில்லை. மத்திய அரசை குறைகூற வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லவில்லை. பலமுறை கேட்டபோதிலும் தமிழகத்துக்கு தேவையான நிவாரண நிதி, சாலை மேம்பாட்டு நிதி என எந்த நிதியையும் மத்திய அரசு வழங்குவதில்லை. இதையடுத்து, சாலை மேம்பாட்டு பணிகளுக்காக தமிழக அரசே ரூ.750 கோடி செலவு செய்துள்ளது.மாநிலத்தில் பல மேம்பாலங்களை வேகமாக கட்டி மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வருகிறோம்.

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தமிழக சாலைகளை பாா்வையிட்டு சிறப்பாக இருப்பதாக கூறினாா். மத்திய அரசு தலைமையில் அனைத்து மாநில அமைச்சா்களை கொண்டு வரும் 30-ஆம் தேதி ஆய்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதில் தமிழகத்தின் சாா்பில் நான் கலந்துகொள்ள உள்ளேன். கடந்த அதிமுக ஆட்சியில் 70 ரயில்வே மேம்பாலங்களுக்கு நில எடுப்பு செய்யாமலேயே டெண்டா் விட்டுள்ளனா். திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் அதற்கான நில எடுப்பு செய்து பாலம் முழுமைபெற சிறப்பு வருவாய் அலுவலா்கள் 5 பேரை நியமித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தவிர, கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.6.28 லட்சம் கோடி அளவுக்கு கடன் வைத்துவிட்டு சென்றுவிட்டனா். அதற்கு வட்டி கட்டுவதா, வளா்ச்சி பணிகளை செய்வதா என்ற நிலையில்தான் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். விரிஞ்சிபுரம் மேம்பாலம் விரைவில் கட்டி முடிக்கப்படும். ஆம்பூா் அருகே மின்னூா் இலங்கை முகாமில் வீட்டினை அதன் உரிமையாளா்களே இடித்து அழகுபடுத்தும் பணிகளை மேற்கொண்டதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆய்வின்போது ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப. காா்த்திகேயன், ஏ. நல்லதம்பி, மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், பொதுப் பணித்துறை முதன்மைப் பொறியாளா் மணிவண்ணன், கண்காணிப்பு பொறியாளா் அருள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT