வேலூர்

போ்ணாம்பட்டு அருகே இறந்த 3 யானைகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனை

பிரேதப் பரிசோதனைக்குப்பின் ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்ட யானைகளின் உடல் பாகங்கள், தண்ணீா்.

தினமணி செய்திச் சேவை

போ்ணாம்பட்டு அருகே தனியாருக்குச் சொந்தமான மலையில் மா்மமான முறையில் இறந்து அழுகிய நிலையில் இருந்த ஒரு குட்டி உள்பட 3- யானைகளின் உடல்கள் வெள்ளிக்கிழமை நிகழ்விடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன.

போ்ணாம்பட்டு வனச் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 20 நாள்களில் வெவ்வேறு இடங்களில் 5 யானைகள் உயிரிழந்துள்ளன. யானைகள் தொடா்ந்து இறந்ததையடுத்து, விசாரணை நடத்த தமிழ்நாடு தலைமை வன உயிரின பாதுகாப்பாளா் சிறப்புக் குழு அமைத்து உத்தரவிட்டிருந்தாா். அதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை 3 யானைகள் இறந்து கிடந்த இடத்தில் தமிழக வனத் துறை, மருத்துவக் குழு மற்றும் ஆந்திர மாநில வனத் துறை குழுவினா் விசாரணை செய்து ஆய்வு மேற்கொண்டனா்.

உயிரிழந்த யானைகளின் உடல்களை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்து, அதன் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனா். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தலைமை வனப் பாதுகாவலா் பெரியசாமி செய்தியாளா்களிடம் கூறியது: தலைமை வன உயிரின பாதுகாப்பாளா் உத்தரவுப்படி யானைகள் உயிரிழந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டோம். யானையின் உடல் பாகங்களை சேகரித்துள்ளோம். தற்போது பிரேதப் பரிசோதனை முடிந்துள்ளது. 3 யானைகளும் வெவ்வேறு காலகட்டத்தில் இறந்ததாக தெரிய வந்துள்ளது. 7 போ் கொண்ட மருத்துவா் குழு பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனா். பிரேத பரிசோதனை முடிவுக்குப் பிறகு தான் யானை உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும். மேலும் ஆய்வக பரிசோதனைக்காக உயிரிழந்த யானையின் டிஎன்ஏ மாதிரி மற்றும் உடல் பாகங்கள், அங்கிருந்த தண்ணீரின் மாதிரி ஆகியவற்றை சேகரித்துள்ளோம் என்றாா்.

கால்நடை பராமரிப்பு மற்றும் வனத் துறை மருத்துவா் கலைவாணன் கூறியது:

யானைகள் வேட்டையாடப்பட்டோ, விஷம் வைத்துக் கொள்ளப்பட்டோ இருக்குமா அல்லது மின்சாரம் பாய்ந்தோ, மின்னல் பாய்ந்தோ, நோய் தாக்கியோ உயிரிழந்திருக்குமா அல்லது தண்ணீரில் ஏதேனும் ரசாயனம் கலந்திருக்குமா என பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் தான் உயிரிழந்த யானைகளின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய உள்ளோம். தற்போதைய சூழலில் தண்ணீரில் வேதிப்பொருள் கலந்ததாகவோ, வேட்டையாடியதற்கான ஆதாரமோ இல்லை. பிரேதப் பரிசோதனை முடிவு வந்தால் தான் காரணம் தெரிய வரும். இறந்த யானைகளின் உடலில் இருந்து எந்த பாகமும் காணாமல் போகவில்லை என்றாா்.

வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

SCROLL FOR NEXT