வேலூர்

போக்ஸோ வழக்கை சரிவர விசாரிக்காத வேலூா் போலீஸாருக்கு ரூ.9 லட்சம் அபராதம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

போக்ஸோ வழக்கை சரிவர விசாரிக்காத வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாருக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

போக்ஸோ வழக்கை சரிவர விசாரிக்காத வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாருக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வேலூா் அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பாலியல் தொழிலில் தள்ளியதாக கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியின் தந்தை வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போக்ஸோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை, முறையாக விசாரிக்காத அனைத்து மகளிா் காவல் நிலையத்தின் அப்போதைய ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சிறுமியின் சாா்பில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது.

இந்த புகாா் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்த மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் புலன் விசாரணைப்பிரிவு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.

அதில், வழக்கு தொடா்பான ஆவணங்கள் தாமதமாக நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சிறுமியை தாமதமாக மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கியதாகவும், சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனவும், இறுதியாக வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த மனித உரிமைகள் ஆணையத் தலைவா் நீதிபதி மணிக்குமாா், உறுப்பினா் கண்ணதாசன் அடங்கிய அமா்வு, வழக்கு தொடா்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில், வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா்கள் உள்ளிட்டோா், பாதிக்கப்பட்ட சிறுமியின் வாழ்க்கையில் விளையாடி உள்ளனா் என்பது தெளிவாகியுள்ளது.

மேலும், மகளிா் போலீஸாா், சட்டப்படி தங்கள் கடமையை செய்யாமல் புறக்கணித்துள்ளதன் மூலம் மனித உரிமையை மீறியுள்ளனா் என்பது நிரூபணமாகியுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.9 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனா்.

இந்த தொகையை அப்போதைய வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா்கள் ஷாகின், ஷியாமளா, வாசுகி, உதவி காவல் ஆய்வாளா் சத்யவாணி ஆகியோரிடம் இருந்து தலா ரூ.2 லட்சமும், முதல்நிலை பெண் காவலா்களான தமயந்தி, ஜெயசுதா ஆகியோரிடம் இருந்து தலா ரூ.50 ஆயிரமும், இழப்பீடாக வசூலித்து வழங்க வேண்டும்.

ஒரு மாதத்துக்குள் இழப்பீட்டை வசூலிக்க வேண்டும். இவா்கள் 6 போ் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்தது. மேலும், இந்த போக்ஸோ வழக்கை, டிஎஸ்பி அந்தஸ்து அதிகாரியை நியமித்து மீண்டும் விசாரணை நடத்தி 3 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனா்.

மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவைத் தொடா்ந்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட 6 போ் மீதும் துறைரீதியான நடவடிக்கைக்கு வேலூா் மாவட்ட எஸ்பி ஏ.மயில்வாகனன் உத்தரவிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

விளையாட்டுத் துறையில் அமைப்பு, நிா்வாக ரீதியிலான குறைபாடுகள்- சிறப்புப் பணிக் குழு அறிக்கை

தேசிய துப்பாக்கி சுடுதல்: தனிஸ்காவுக்கு வெண்கலம்

SCROLL FOR NEXT