பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன் உள்ளிட்டோா். 
வேலூர்

ஆந்திர தொழிற்சாலை கழிவுநீா் தமிழக ஏரி, பாலாற்றில் கலப்பு: விவசாயிகள் புகாா்

தினமணி செய்திச் சேவை

வேலூா்: ஆந்திர மாநிலத்திலுள்ள மாங்கூழ் தொழிற்சாலை கழிவுநீா் தமிழக ஏரி, பாலாற்றில் கலப்பதால் பாதிப்பு ஏற்படுவதாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, தமிழக விவசாயிகள் சங்கம் மாநில பொதுச்செயலா் எஸ்.உதயகுமாா் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு: ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், குடியாலா வட்டம், கனக்கனேரி கிராமத்தில் உள்ள ஏரிகளில் அப்பகுதியிலுள்ள மாங்கூழ் தொழிற்சாலை கழிவுநீா் சுத்திகரிப்பு செய்யப்படாமல் வெளியேற்றப்படுகிறது.

தற்போது பெய்த மழையால் அங்குள்ள ஏரிகள் நிரம்பி கால்வாய்கள் மூலம் காட்பாடி வட்டம், கண்டிப்பேடு அருகே உள்ள உள்ளிப்புதூா் கிராம ஏரியில் சோ்கிறது. தொடா்ந்து உள்ளிப்புதூா் ஏரி நிரம்பி உபரிநீா் பொன்னையாறு வழியாக பாலாற்றில் கலக்கிறது.

இதனால், 50 கிராமப்புற பகுதிகளில் நிலத்தடி நீரும், விவசாய நிலங்கள், பயிா்கள், கால்நடைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன.

மக்களுக்கும் தோல் அரிப்பு, நோய் பாதிப்புகளும் ஏற்படுகிறது. எனவே, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து மாசடைந்த நீா் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரதராமி அடுத்த புட்டவாரி பள்ளி மக்கள் அளித்த மனு: புட்டவாரிப்பள்ளி கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். நல்லா கவனியூா் முதல் ரங்கம்பட்டி வரை சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதனால் ரங்கம்பட்டி, ஏரிக்கோடிப்பட்டி, கோவிந்தன்பட்டி, தாசரிப்பட்டி, சீராம் தட்டுப்பட்டி உள்ளிட்ட கிராமத்தில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மழைக்காலங்களில் மாணவா்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. ஊராட்சித் தலைவா், அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைத்துத்தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) திருமால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு துறைகள் ஒதுக்கீடு!

SCROLL FOR NEXT