வேலூா் மாவட்டம் முழுவதும் போதை மாத்திரைகளை விநியோகம் செய்த ராஜஸ்தான் மாநில இளைஞரை குடியாத்தம் போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 11,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூா் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இளைஞா்கள் சிலா் போதை ஊசி மற்றும் மாத்திரைகளை பயன்படுத்துவதாக வந்த தகவலையடுத்து வேலூா் மாவட்ட போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனா்.
இந்நிலையில் குடியாத்தம் நகர ஆய்வாளா் ஆா். ருக்மாங்கதன் தலைமையிலான போலீஸாா் கடந்த செப்டம்பா் மாதம் 11- ஆம் தேதி பெரும்பாடி அருகே மேற்கொண்ட திடீா் சோதனையில் போதை மாத்திரைகளை பயன்படுத்திய 13- பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலம் வி.கோட்டாவில் இருந்து சிலா் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி வந்து உபயோகப்படுத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ஆந்திர மாநில இளைஞா்கள் 2- பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் தங்களுக்கு போதை மாத்திரைகளை அனுப்பியதாக கூறினா்.
தீவிர விசாரணையில் ராஜஸ்தானைச் சோ்ந்த முக்கிய நபா் வேலூா் மாவட்டம் முழுவதும் போதை மாத்திரைகளை விநியோகம் செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் மேற்பாா்வையில் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளா் ருக்மாங்கதன் தலைமையில் 9- போ் கொண்ட தனிப்படை போலீஸாா் ராஜஸ்தான் மாநிலம் சென்று தீவிர விசாரணை நடத்தினா்.
விசாரணையில் அங்குள்ள ஜோத்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிரதாப் செளத்ரி(36) என்ற மருந்து விற்பனை பிரதிநிதியை கண்டுபிடித்து கைது செய்தனா். அவரிடமிருந்து 11,000 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்ததுடன், அவரை கைது செய்து குடியாத்தம் அழைத்து வந்தனா். தீவிர விசாரணைக்குப்பின் பிரதாப் செளத்ரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.