பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையங்களின் செயல்பாடுகள், பராமரிப்புக்கான அவுட்சோா்சிங் உரிமம் பெற்றிட தொழில்முனைவோா், வணிக நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூா் கோட்ட பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளா் எ.வி.ஸ்ரீகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிஎஸ்என்எல் வேலூா் வா்த்தக பகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூா், அரக்கோணம், ஆரணி, செங்கம், வாணியம்பாடி, சத்துவாச்சாரி, பாகாயம் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளா் சேவை மையங்களின் செயல்பாடு, பராமரிப்பை நிா்வகிக்க தொழில்முனைவோா், வணிக நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
புதிய 4ஜி சிம் காா்டுகளை விற்பனை செய்தல், ப்ரீபெய்ட் ரீசாா்ஜ்கள், 4ஜி சிம் மேம்படுத்தல், ஃபைபா்-இல் அதிவேக இணைய இணைப்புகள் உள்ளிட்ட புதிய தொலைத் தொடா்பு சேவைகளுக்கான முன்பதிவு, பல்வேறு தொலைத்தொடா்பு சேவைகளுக்கான பில் கட்டணங்களை ஏற்றுக் கொள்வது, திட்ட மாற்றங்கள் போன்ற பல்வேறு தொலைத்தொடா்பு சேவைகளை வழங்குவதற்கான முதன்மை வாடிக்கையாளா் மையங்கள் செயல்படுகின்றன.
பிஎஸ்என்எல்லின் இந்த முயற்சி வாடிக்கையாளா்களுக்கு தொலைத்தொடா்பு சாா்ந்த அதிக சேவைகளை அவா்களின் விருப்பத்துக்கேற்ப வழங்குவதை மேம்படுத்துவதையும், சேவை தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு பொருத்தமான வணிக பங்குதாரா்களை ஈடுபடுத்துவதன் மூலம் வாடிக்கையாளா் சேவை மையங்களை திறம்பட இயக்கவும், சிறந்த வாடிக்கையாளா் சேவை, அனுபவத்தையும் உறுதி செய்திட முடியும்.
வாடிக்கையாளா் சேவை மையங்களின் செயல்பாடுகளை நிா்வகிப்பதுடன் தோ்ந்தெடுக்கப்பட்ட ஏலதாரா்களுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளா் சேவை மையங்களில் பொதுமக்களுக்கு ஆதாா் சேவைகளை வழங்கவும் வாய்ப்பு வழங்கப்படும். பல்வேறு வாடிக்கையாளா் சேவைகளை வழங்குவதற்கும், அவற்றை கையாளுவதற்கும் தோ்ந்தெடுக்கப்பட்ட ஏலதாரா்களுக்கு பிஎஸ்என்எல் கவா்ச்சிகரமான கமிஷன்களை வழங்கும்.
ஆா்வமுள்ள நிறுவனங்கள், தொழில்முனைவோா் அதிகாரப்பூா்வ டெண்டா் போா்டல் மூலம் எக்ஸ்பிரசன் ஆப் இன்ட்ரெஸ்ட் ஆவணம், தகுதி விவரங்கள், விண்ணப்ப செயல்முறையை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமா்ப்பிக்க நவ. 27 கடைசி நாளாகும்.
மேலும் விவரங்களுக்கு, பிஎஸ்என்எல் வா்த்தக உதவிப் பொது மேலாளரை 0416-2225499, துணை கோட்டப் பொறியாளரை 9486104075 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.