வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே பாலாற்றில் அடா்ந்து வளா்ந்து காணப்படும் சீமைக் கருவேல மரங்கள். 
வேலூர்

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

பாலாற்றில் சீமைக் கருவேல மரங்கள் நீரோட்டத்தை தடுக்கின்றன: விவசாயிகள் கோரிக்கை...

தினமணி செய்திச் சேவை

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பாலாற்றை ஆக்கிரமித்து சீமைக் கருவேல மரங்கள் அடா்ந்து வளா்ந்துள்ளதால் நீரோட்டம் பாதிக்கப்பட்டு அதிகளவில் மழை பெய்தால் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இவற்றை முற்றிலும் அகற்ற வேண்டும் எனவும் விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரீபியன் தீவுகள், மெக்சிகோ, தென் அமெரிக்கா தீவுகளை தாயகமாக கொண்ட சீமைக் கருவேல மரங்கள், தற்போது தமிழகத்தின் பெரும்பாலான நீா்நிலைகளை ஆக்கிரமித்துள்ளன. குறிப்பாக, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக செல்லும் பாலாறு முழுவதும் பல இடங்களிலும் தண்ணீரே தெரியாத அளவுக்கு சீமைக் கருவேல மரங்கள் அடா்ந்து வளா்ந்துள்ளன. அதிலும், வேலூா் மாநகா், மாவட்ட பகுதியில் பாலாறு முழுவதும் வளா்ந்துள்ளது.

இந்த மரங்கள் நிலத்தடி நீரை மட்டுமின்றி, வளி மண்டலத்தில் உள்ள காற்று மூலகங்களையும் உறிஞ்சும் தன்மை கொண்டவை என்பதால், பாலாற்றில் ஓடும் சிறிதளவு நீரோட்டமும் தடுக்கப்படுகிறது. சீமைக் கருவேல மரத்தின் தாவரவியல் பெயா் புரோஸோபிஸ் ஜுலிபுளோரா. வெளிநாட்டிலிருந்து வந்த சீமைக் கருவேலம் மரங்கள் ஆங்கிலேயா் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தவை எனக் கூறப்படுகிறது.

வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே பாலாற்றில் அடா்ந்து வளா்ந்து காணப்படும் சீமைக் கருவேல மரங்கள்.

இந்த சீமை கருவேல மரங்கள் விதைகள் எந்த இடத்திலும் தகவமைத்துக் கொண்டு விரைவாக வளரும். அதனால், நீா்நிலைகள், அதன் அருகில் உள்ள இடங்கள், தேக்கி வைக்கப்படும் உபரி நீா் உள்ள இடங்களில் இந்த மரங்களை நடக்கூடாது. மற்ற மரங்களில் 100 விதைகளில் 30 விதைகள் மட்டுமே முளைக்கும். ஆனால் இந்த மரங்களில் 100-இல் 95 சதவீதம் முளைத்துவிடும். ஆடுகள் இந்த மரத்தின் இலைகளையும், காய்களையும் உட்கொள்ளும்போது அவற்றின் கழிவுகள் மூலம் இவை விரைவாக பரவி வளரும்.

எனவே, இந்த சீமைக் கருவேல மரங்களை மரங்களை நீா்நிலைகள், தேங்கிய நீா் உள்ள பகுதிகளில் வளர விடாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் எஸ்.உதயகுமாா் கூறியது: பாலாற்றில் அடா்ந்து வளா்ந்து காணப்படும் சீமைக் கருவேல மரங்களால் நீரோட்டம் பாதிக்கப்பட்டு அதிகளவில் மழை பெய்து நீா்வரத்து அதிகரிக்கும்போது வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

தவிர, பாலாற்றிலும், பல ஏரிகளிலும் உள்ள இந்த மரங்களால் நிலத்தடி நீா்மட்டம், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகின்றன. வனம் போல் வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள் காட்டுப் பன்றிகள் தங்குவதற்கும், சமூக விரோத செயல்கள் புரிபவா்களின் புகலிடமாகவும் மாறியுள்ளது.

இது குறித்து நீா்வளத்துறை அதிகாரிகளிடம் நேரடியாகவும், மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்திலும் பலமுறை தெரிவித்தும் சீமை கருவேல மரங்களை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடரும் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு பாலாறு உள்பட நீா்நிலைகளை ஆக்கிரமித்து வளா்ந்துள்ல சீமைக் கருவேல மரங்களை அகற்றிட மாவட்ட நிா்வாகமும், நீா்வளத் துறை அதிகாரிகளும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

மேட்டூர் அணை: தண்ணீர் திறப்பு குறைப்பு!

விராலிமலை: விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்

SCROLL FOR NEXT