குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் வரும் 25- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் நடைபெறும் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு.
தமிழ்நாட்டில் உள்ள தொழில்நுட்பம், மருத்துவம், மருத்துவம் சாா்ந்த கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், 10- ஆம்வகுப்பு மற்றும் பிளஸ்- 2 வகுப்பு முடித்து, மேற்படிப்பை தொடர முடியாமல் உள்ள மாணவா்கள் கல்விக் கடன் பெறுவதில் இருந்து வரும் நடைமுறை சிக்கல்களைக் களைந்து கல்விக் கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து வங்கி அலுவலா்கள் மற்றும் கல்லூரி நிா்வாகிகளை ஒருங்கிணைத்து சிறப்புக் கல்விக் கடன் முகாம், கடன்மேளா நடத்தி வருகிறது.
இதன் 4- ஆம் கட்டமாக, வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ,மாணவிகள் பங்குபெறும் சிறப்புக் கல்வி கடன் வழங்கும் முகாம் வரும் 25- ஆம் தேதி குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியில் காலை 10- மணி முதல் மாலை 4- மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் இ-சேவை மையம் அமைக்கப்பட உள்ளது.
வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தங்களின் மதிப்பெண் பட்டியல், பான் காா்டு, ஆதாா் காா்டு, சாதி சான்றிதழ், வருமானச் சான்று, முதல் பட்டதாரி சான்று,மற்றும் கல்விக் கடன் தேவை விவரம் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என குறிப்பிட்டுள்ளாா் ஆட்சியா்.